பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

506

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


புதுவையில் காங்கிரஸ் நல்ல வகையாகத் தோல்வியைத் தழுவியது பற்றி “விடுதலை” 11, 12 இரு நாட்களும் தலையங்கம் தீட்டியது. 17ந் தேதி அங்கே ஃபாரூக் தலைமையில் தி.மு.க. அமைச்சரவை பதவி ஏற்றது. தி.மு.க. அமைச்சர்களின் சுற்றுப் பயணம், சொற்பொழிவு ஆகியவை “விடுதலை" யில் நிரம்ப இடம் பெற்றன. பெரியார், மார்ச் மாதம் நிறைய சுற்றுப்பயணம் மேற் கொண்டவர். எல்லா இடங்களிலும் அண்ணாவின் சிறப்புகளை நவிலத் தவறுவதில்லை, சென்னை சட்டக் கல்லூரி விடுதியில் பெரியார் 15-ந் தேதி அண்ணா படத்தினைத் திறந்தார். சட்டக் கல்லூரி வளைவில் 12-ந் தேதி டாக்டர் ஏ. எல். முதலியார் அண்ணா சிலையைத் திறந்து வைத்தார். காஞ்சியில் 13.3.69-ல் பேசிய நாவலர், தான் கட்சிப் பணிகளைக் கவனித்துக் கொள்வதாகவும், கலைஞர் ஆட்சிப்பணிகளைக் கவனிக்கட்டும் என்றும் கூறினார். நாவலரும், செழியனும் பெரியாரை ஒருமுறை சந்தித்துக் கலைஞரின் கீழ் அமைச்சராக இருக்க இயலாமை குறித்துப் பேசினார்கள். பெரியார் அதை அவ்வளவாக இரசிக்கவில்லை !

தஞ்சை மாவட்டத்தின் ஈடு சொல்ல முடியாத செயல் வீரர் வி.எஸ். பி. யாக்கூப் சென்னைப் பொது மருத்துவ மனையில் 15-ந் தேதி மறைந்தார். அன்னாரின் உடல் திருவாரூர் கொண்டு செல்லப்பட்டுச் சிறப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. யாக்கூபால் அழைக்கப்பட்டுத், தஞ்சை மாவட்டத்தில், சுற்றுப் பிரயாணம் செய்யாத தலைவர்களே, இயக்கத்தில் கிடையாது! 14ந் தேதிதான் பெரியாரும், மணியம்மையாரும் யாக்கூபை மருத்துவமனையில் கண்டு நலம் விசாரித்தனர். அப்போதே கவலைக்கிடமான நிலைதான் அப்போது கூட, அங்கே சிகிச்சை பெற்று வந்த கே. ராஜாராம், திருச்சி அருணாசலம் ஆகியோரையும் இருவரும் கண்டு திரும்பினர். 17.3.69 “விடுதலை”, யாக்கூப் மறைவுக்காகத் துணைத் தலையங்கம் எழுதிச் சிறப்பித்தது.

14, 15, தேதிகளில் பெரியார் தி.மு.க. கட்சிக் கட்டுப்பாடு பற்றி மூன்று தலையங்கக் கட்டுரைகள் தீட்ட நேர்ந்தது. பேராசிரியர் அன்பழகன் அந்த நிலைமையை உண்டாக்கி விட்டார். சென்னை நேப்பியர் பூங்காவில் பேசும்போது, “நான் கருணாநிதியைத் தலைவர் என்று ஏற்றுக் கொண்டால், என் மனைவியே என்னை மதிக்க மாட்டார்' என்றாராம்! "அதிருப்தியாளர்கள் கட்சியிலிருந்து விலகி விடுவதே நல்லது; பெருந்தன்மையுமாகும். கட்சியில் இருக்கிற வரையில் தலைவருக்குக் கட்டுப்பட்டு தான் தீரவேண்டும். தனி நபரைப் பற்றி எனக்குக் கவலையில்லை. கருணாநிதியே, அண்ணா எனக்குப் பயந்து கொண்டு இருந்த காலத்தில், என்னை வெளிப்படையாக எதிர்த்துப் பேசி, விலக முயன்றவர்தான். இன்றைக்குக் கருணாநிதி இடத்தில் அன்பழகன் இருந்து, கருணாநிதி தலைவரை