பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

517


வந்தனர். 4-ந் தேதி மாலை 3.30 மணிக்கு திருமதி திரு. எம்.ஜி.ராமச்சந்திரன், காலையில் கே.ராஜாராம் ஆகியோர் பார்த்தனர். அன்று பெரியாருக்கு மூத்திரப் பையில் அறுவை நடந்து, உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. 6ம் தேதி மதியழகன், ஜி.டி. நாயுடு, பி.ஜி.கருத்திருமன் கண்டனர். 7-ந் தேதி புதிய மந்திரி என்.வி. நடராசன் தமது குடும்பத்தாருடன் சென்று பெரியாருக்கு மாலையணிவித்தார். அப்போது அங்கிருந்த Dr.பட் அவர்களிடம் பெரியார், He is honourable Mr. N.V. Natarajan. Today he has become a minister. He was once my private secretary" என்று அறிமுகம் செய்து வைத்தார்.

10-8-69 அன்று ப.உ சண்முகம். பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரும் பெரியாரை நலம் விசாரித்தனர். அன்றைய தினம் பெரியார் திருச்சியில் நடைபெற்ற நீதித்துறை அலுவலர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள ஒப்புதல் தந்திருந்தார். “எவ்வளவோ விஷயங்களை உங்களுக்குத் தெரிவிக்கவும், உங்களிடமிருந்து தெரிந்து கொள்ளவும் இருந்தேன். உடல் நலக் குறைவால் இயலாமல் போனது. பாமர மக்களுக்கு நீதி முறையிலுள்ள கொடுமைகள் நீங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்" என்று பெரியார் வேலூரிலிருந்து செய்தி அனுப்பியிருந்தார். 11-ந் தேதி காலை 11-45 மணிக்குக் காமராசர், வேலூரில் பெரியாரைச் சந்தித்து, அளவளாவினார். 14 அன்று ம.பொ.சிவஞானம், டி.கே.சண்முகத்துடன் வந்துசென்றார். மறுநாள் அய்.ஜி. மகாதேவனும், பிரதம எஞ்சினீயர் சி.வி. பத்மநாபனும் பார்த்து நலம் விசாரித்தனர். 8-ந் தேதி இரவு குன்றக்குடி அடிகளார் பெரியாரைக் கண்டனர். 19-ந் தேதி மாலை 3-30 மணிக்குப் புறப்பட்டு நேரே நாகரசம்பட்டி சென்று திருமணத்தை நடத்தி விட்டு, மறுநாள் ஆம்பூரிலிருந்து, அடுத்த நாள் மீண்டும் வேலூர் மருத்துவமனைக்கே வந்தார் பெரியார். 25-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆகித் திருச்சி சென்றுவிட்டார். செப்டம்பர் மாதம் வரை ஓய்விலிருப்பார் என்று செய்தி கிடைத்தது. அதற்குள் 28-ந் தேதியே வேலூர் சென்று, புது டியூப் பொருத்தி வந்தார். சோர்வும், களைப்பும் அதிகமிருந்தது.

ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க. உறுப்பினர்கள், வி.வி. கிரிக்கு வாக்களித்தது தெரிந்ததும், பெரியார் "தி.மு.க. தலைமை சிந்திக்க வேண்டும். பார்ப்பானோ அல்லது சூத்திரனல்லாதானோதான் இதுவரை ராஷ்ட்ரபதியாக வரமுடிகிறது" என்று எழுதினார். மதுரை திராவிடர் கழகக் கட்டட நிதிக்காகப் பெரியார் 1,000 ரூபாய் அன்பளிப்பாகத் தந்து, மற்றவர்களும் வழங்கிட, வேண்டுகோள் விடுத்தார். 26-8-69 அன்று “ஆனந்த விகடன்" அதிபர் எஸ்.எஸ். வாசன் மறைவுக்கு "விடுதலை" துணைத் தலையங்கம் தீட்டியது. “குடி அரசு" துவக்க நாட்களில், வாசன் விளம்பரந் திரட்டும் ஏஜண்டாகப் பணியாற்றி யிருக்கிறார். பெரியாரிடம் மிக்க அன்பு பூண்டவர்.