பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

532

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


துறையிலுள்ள அதிகாரிகளில் 75 சதவீதம் நேர்மையில்லாதவர்கள்தான். இனி அந்த இலாகா நேர்மையாகிவிடும். 200 ரூபாய் அதிக வருமானம் உள்ளவர்களுக்கு, ரூபாய்க்குப் படி அரிசி என்பதை 100 ரூபாய் உயர்ந்த வருமானம் என்று வைக்கலாம். உணவுக் கட்டுப்பாட்டை நீக்கியதற்காக முதலமைச்சர் அவர்களையும், உணவு அமைச்சர் அவர்களையும் பாராட்டுகிறேன் - ஈ.வெ. ராமசாமி."

"உண்மை மாத இதழ் ஆண்டுச் சந்தா 3 ரூபாய். கடவுள் புரட்டு, மதப் புரட்டு, சமுதாய இயல் புரட்டு, தேசியப் புரட்டு, புராண இதிகாசப் புரட்டு, சாஸ்திரப் புரட்டு இவைகளை விளக்கிடும் பகுத்தறிவு இதழ். எல்லாரும் சந்தாதாரராகுங்கள் ஈ.வெ. ராமசாமி."

முறையே ஜனவரி 9, 10 தேதிகளில் “விடுதலை"யில் வெளியான பெட்டிச் செய்திகள் இவை. 14-1-70 பொங்கல் திருநாள் அன்று மாலை 5 மணிக்குத் திருச்சியில் “உண்மை ” இதழ் வெளியீட்டு விழா நடந்தது. பெரியார் வரவேற்புரை நிகழ்த்தினார். சே.மு.அ. பாலசுப்ரமணியம் தலைமையில், வீரமணி வெளியிட்டார். இப்போதே 5,000 பேர் சந்தா செலுத்தியுள்ளனர், நானே உட்கார்ந்து எழுதப் போகிறேன் என்றார் பெரியார். விழாவில் செல்வேந்திரன், அன்பில் தர்மலிங்கம், ஜி. பராங்குசம், டி.டி. வீரப்பா, வே. ஆனைமுத்து, கே. கோவிந்தராஜ், து.ம. பெரியசாமி ஆகியோர் உரையாற்றினர். புலவர் கோ. இமயவரம்பன் நன்றி கூறினார்.

"உண்மை" முதலிதழில் பெரியாரின் தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்:- “மக்களைப் பகுத்தறிவு வாதிகளாக ஆக்க வேண்டும். மூடநம்பிக்கைகளை ஒழித்து, மக்களை அறிவாளிகளாக்கும் பணியில் நான் பலமுறை சிறை சென்றிருக்கிறேன். வாழ்க்கையில் பல இன்னல்களை அடைந்திருக்கிறேன். அரசாங்கத்தால் வெறுக்கப்பட்டிருக்கிறேன். கடந்த காலத்துக்கு என்று 15 லட்சம் ரூபாயும், இந்த ஆண்டுக்கு என்று 1 லட்சம் ரூபாயும் இன்கம்டாக்ஸ் போடப்பட்டு, என் முயற்சியைத் தடுக்க நினைக்கிறார்கள். இது தவிர நம் நாட்டில் உள்ள எல்லாப் பார்ப்பனராலும், மேல் சாதியாராகத் தங்களைக் கருதிக்கொள்ளும் சைவர்களாலும், 100க்கு 90 கிறிஸ்தவர்களாலும் நான் வெறுக்கப்படுகிறேன். இஸ்லாமியர்களால் வெளிப்படையாய் வெறுக்கப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஓர் அதிசயம், ஆதித்திராவிட மக்களுள், பதவியில் உள்ள சிலர் தவிர, ஒருவர்கூட எனக்கு ஆதரவாளர் கிடையாது.

இதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடையத்தக்கதும் உண்டு. என் கட்சியில் கட்டுப்பாடும் கடமைப்பாடும் அதிகம். பிடிக்காவிட்டால் வெளியில் போய்விடுவார்கள். “குடி அரசு" துவக்க காலம், மோசமாக இருந்தது. இப்போதும் “உண்மை "யின் தொண்டும் எதிர் நீச்சல் தொண்டுதான். "குடி அரசு" இதழை ஒழிக்கக்