பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

538

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பெயர்ப் பலகைகளில் பிராமணாள்" எழுத்தை அழித்திட முன்வந்தனர், உணவுவிடுதி உரிமையாளர்கள்.

15-4-70 இரவு 8 மணிக்கு, சேலம் ராவ்சாகிப் பி. இரத்தினசாமிப் பிள்ளை தமது 62-வது வயதில் காலமாகிவிட்டார். பெரியாரும் வீரமணியும் ஏதோ ஒரு காரை இரவல் பெற்று, உடனே சேலம் விரைகின்றனர். மறுநாள் திரும்பவும் சென்னையில் நிகழ்ச்சி இருக்கிறது பெரியாருக்கு! உளுந்தூர்பேட்டையருகில், கார் ரிப்பேராகி விடுகிறது. பெரியாரை இறக்கி விட்டுக், காரை எடுத்துப் போய், வீரமணி ஒரு மெக்கானிக்கைப் பிடித்துச் சரி செய்கிறார். இதற்குள் நேரமாகி விடவே, சேலம் செல்வதால் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த பெரியார், சென்னை செல்லும் லாரி ஒன்றில், டிரைவருக்கருகில் ஏறி அமர்ந்து கொண்டு புறப்படுகிறார். வழியில் நின்றுகொண்டிருந்த வீரமணிக்குச் சைகை காட்டியபடியே, பெரியார் லாரியில் விரைகிறார். வீரமணி திகைத்துப்போய், லாரியை வெகுதூரம் துரத்திச் சென்று, வழிமறித்து, முந்தி நின்று, பெரியாரை இறங்கி வருமாறு வேண்டுகிறார்.

"இந்த லாரிக்காரர் எவ்வளவு பிரியத்தோடு என்னை அழைத்துத் தன்னருகில் அமர்த்திக் கொண்டார். சென்னையில் கொண்டுபோய் விடுவதாக அவர் அன்புடன் ஒப்புக் கொண்டுள்ளார். பாதியில் இறங்கி வந்துவிட்டால் அவர் மனம் நோகாதா?" என்று, பெரியார் மறுக்கிறார். பிறகு லாரி டிரைவரே முன்வந்து பெரியாரிடம் வேண்டி, இறக்கிவந்து காரில் ஏற்றி விடுகிறார். 18-ந் தேதி காஞ்சிபுரம் செல்லப் புறப்படும் போது பெரியாரின் உடல்நிலை கெடுகின்றது; ஜுரம் வந்து விட்டது. மறுநாள் பண்ணுருட்டி நிகழ்ச்சிக்குத் தமக்குப் பதில் வீரமணியைப் போகச் சொல்லித், தொடர்ந்து, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டச் சுற்றுப் பயணத்தையும் ரத்து செய்துவிட அறிவித்தார் பெரியார்.

23-ந் தேதியன்று சி.பி. சிற்றரசு தமது 64-வது வயதில் சட்டமன்ற மேலவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 24-ந் தேதி வந்து பெரியாருக்கு மாலை சூட்டி வணங்கினார். “நானல்லவா அய்யாவை வந்து பார்த்திருக்க வேண்டும்!" என்றார் பெரியார். அன்றே ஒரு பெட்டிச் செய்தியில் "நானும் 30-ந் தேதிவரை ஓய்வில் இருக்கிறேன். முதலமைச்சரும் கண் நோயினால் சிகிச்சையில் இருக்கிறார். அதனால் மே 6-ந் தேதி வரை தவணை தரப்பட்டிருக்கிறது. தோழர்கள் சலிப்படைய வேண்டாம்" என்று, பலகையில் 'பிராமணாள்' பெயரழிப்புப் போராட்டம் குறித்து எழுதியிருந்தார். நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? என்று தலையங்கமும் எழுதினார் பெரியார். “நீ கோபிப்பதால் கடவுளையே அவமதிக்கிறாய்! ஆத்திரப்படுபவன்