பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

546

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நான் கழகத் தலைவரிடமும் சொல்வேன்; முக்கியமாக ரிப்பேர் செய்தாக வேண்டும். இப்போதுள்ள பெரிய அதிகாரிகள் பரவாயில்லை. எப்போதுமே சிறிய அதிகாரிகள்தான், யார் ஆட்சிக்கு வந்தாலும் எதிரிகளாகி விடுவார்கள் - என்று தமது மனக்குறைகளை வெளிப்படுத்தவும்; முதல்வர் கலைஞர் 4-ந்தேதி பெரம்பூரில் பேசும் போது, “தந்தை பெரியார் அவர்களின் கருத்தைக் கழகத் தோழர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். நம்மிடையே இன்னும் கட்டுப்பாடு தேவை என்பது உண்மைதான். ஆயினும் பெரியாரவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஊராட்சித் தேர்தல்களில் நமக்கு முன்னேற்றந்தானே ஒழியச் சரிவில்லை . 1,500 ஆக இருந்தது 3,000 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் 5,000 ஆக இருந்தது 3,000 ஆக வீழ்ந்துள்ளது” என்று புள்ளி விவர ஆதாரங்களுடன் விளக்கமளித்தார்.

ஆச்சார்ய கிருபளானி என்னதான் வயது முதிர்ந்த தலைவரானாலும், இன இயல்பு போகவில்லை. தமிழ்நாடு அமைச்சரவையில் பிராமணர் யாருமே இல்லையே எனப் பகிரங்கமாகத் தனது கவலையை வெளிப்படுத்தினார். 31-7-70, 1-8-70 இரண்டு நாட்களும் “கிருபளானியின் ஏக்கம்" என்ற இரு தலையங்கக் கட்டுரைகளால் "விடுதலை" அவரைச் சாடியிருந்தது. டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியம் ஓய்வு பெற்றதால் அவரது இடத்துக்குத் தலைமை மருத்துவராக டாக்டர் கே. ராமச்சந்திரா 6-ந் தேதி முதல் நியமிக்கப் பெற்றார். தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி வைத்துக்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக, முதல்வர் கலைஞர், 14-ந் தேதி அறிவித்தார். 19-ந் தேதி தித்திக்கும் செய்தி ஒன்றை வழங்கி நல்ல முன்னுதாரணம் ஒன்றும் படைத்தார் முதல்வர். N.G.G.O.க்களின் இரகசியக் குறிப்பு முறை (C.R.) ஒழிக்கப்படும் என்பதே அது! சென்னை ஆபட்சுபரியில் சி.என்.ஏ. கவுதமன், துளசிபாய் திருமணம் பெரியார் தலைமையில் 21-ந் தேதி நடைபெற்றது. முதல்வர் கலைஞர் வரவேற்றார். அதேபோல் கலைஞரே முன்னின்று, காஞ்சியில் நாவலர் தலைமையில் சி.என்.ஏ. ராஜேந்திரன் (பாபு), சாந்தா திருமணத்தையும் நடத்திவைத்தார், 6-9-70 அன்று.

ஆகஸ்ட் 25-ல் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் மறைந்தார். தமிழ்நாடு சட்டமன்றம் அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றி 20 நிமிடம் அலுவலை ஒத்திப்போட்டது. டெல்லி சென்று திரும்பிய முதல்வர், மீண்டும் இந்தி எதிர்ப்புப் போர் தொடங்க நேரலாம், என்றார் 27-ந் தேதி. “சபாஷ் கலைஞர் கருணாநிதியாரே" என்று பெரியார் மகிழ்ச்சிப் பெருக்கால் துள்ளிக் குதித்தார். “கண்டறியாதன கண்டேன். எந்த ஆட்சியிலும் நடத்த முடியாத அதிசயம், அற்புதம்; கலைஞரின் புரட்சிக் கொள்கைகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன." என்று பெரியார் தமது இயல்புக்கு மீறிப்