பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

556

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


தக்க சமயத்தில் பிரசுரமாகி விற்பனையாகி வந்தன. 29-12-70-ல். பெரியாருக்குக் காய்ச்சல், தலைவலி, மயக்கம். தலைகீழாய்க் கீழே தள்ளுவது போல் இருக்கிறது. சென்னை செல்வார் - என்று செய்தி 3-1-71 அன்று சென்னை பொது மருத்துவ மனையில் பெரியார் அனுமதிக்கப்பட்டார். 4-1-71 அன்று தமிழ் நாடு சட்டசபையும் கலைக்கப்பட்டது. அன்று இரவு பெரியார் மருத்துவ மனையிலிருந்தவாறே, மயிலாப்பூர் சென்று, கலைஞர் எழுதிய “தானே அறிவாளி" என்ற தேர்தல் பிரச்சார நாடகத்தை, ஆர்.ஆர். சபாவில் பார்த்தார். 5-ந் தேதி பகல் கலைஞர், நாவலர், ப.உ. சண்முகம் ஆகியோர், பெரியாரை மருத்துவ மனையில் கண்டு நலம் விசாரித்தனர். பெரியார் 6-ந் தேதி இல்லந் திரும்பினார். 5-1-71- முதல், நீண்டகால இயக்கப் பாடகர் நாகூர் இசை முரசு இ.எம். அனீஃபா, மேலவை உறுப்பினரானார்.

நாங்கள் நான்காண்டு காலம் கொள்கைப்படி ஆண்டோம். நாங்கள் செய்த எத்தனையோ காரியங்களில் எங்களுக்கு அனுபவம் போதாததால் எங்களுடைய judgement - ல் ஏதாவது தவறு இருந்தாலும் இருக்கலாம். இனி அப்படியும் நேராமல் பார்த்துக் கொள்ளுவோம். நமக்கு இப்போது முக்கியமானது இந்த இராஜாஜி - காங்கிரஸ் கூட்டு ஒழிந்தால்தான், மான வாழ்வு ஏற்படும். தவறியும் அவர்கள் வெற்றி பெற இடந்தரக்கூடாது. தாம் ஆட்சியில் அமர்த்திய இந்திராகாந்தி அம்மையாரையே இப்போது காமராஜர் எதிர்ப்பது ஏன்? சமுதாயப் பொருளாதாரத்துறையில் அந்த அம்மையார் ஏற்படுத்திய மாற்றந்தானே? அதேபோல் இங்கேயும் தாம் ஏற்படுத்திய தி.மு.க. ஆட்சியை ஆச்சாரியாரே எதிர்ப்பது ஏன்? சமுதாய பேதங்களைப் பாதுகாப்பதற்குத் தி.மு.க. இணங்காததுதானே காரணம்! இதைப் பொது மக்கள் நல்லவண்ணம் சிந்திக்க வேண்டும் - என்பதாகப் பெரியார் எழுதிவந்தார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில், முன்பு பெரியாரின் இராமாயணப் பாத்திரங்கள் நூலைப் பறிமுதல் செய்தது செல்லாது என அந்த மாநில உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்த செய்தி 20-1-71 அன்று பிரசுரமாயிற்று. ஜனவரி 23, 24 தேதிகளில் தமிழ்நாடு இருபெரும் மாநாடுகளை ஒருங்கே கண்ணுற்றது. சென்னை அசோக் நகரில் தி.மு.க. சிறப்பு மாநாடு, ஊர்வலம், வேட்பாளர் பட்டியல் இங்கு வெளியிடப்பட்டது. பிரச்சினைகள், வழக்குகள், வாதப் பிரதிவாதங்களுக்கு நிறைய இடமளித்த சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடும் இந்தத் தேதிகளில் நடந்தது. சேலம் ரத்தினசாமி பந்தலில் ரோசு அரங்கில் மாநாடு. ½ மைல் நீளமுள்ள பிரம்மாண்டமான ஊர்வலம். கருங்கடல் அலைகள் பெருங்குரல் எடுத்து அருங்காட்சி அமைத்திட ஒருங்கே திரண்டதோ என 50,000 கருஞ்சட்டை வீரர்களின் அணி வகுப்பு. ஊர்வலத்தில் தீமிதி, அலகு குத்திக்கொள்ளுதல், கரகம், காவடி