பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

557


ஆட்டம் முதலியவை. 10 அடி உயரமுள்ள ராமன் எரிக்கப்பட்ட ராவணலீலாக் காட்சியை 2 லட்சம் மக்கள் கண்டு களித்தனர். ஊர்வலத்தில் மத நம்பிக்கையைப் புண்படுத்தும் காட்சிகளை எடுத்துச் செல்ல வேண்டாமெனக் காவல்துறை அதிகாரிகள் கூறியபோது, எழுத்து மூலமாக அப்படித் தடைபோடும் உத்தரவு தரச்சொன்னார் பெரியார். தரப்படவில்லை. ஊர்வலம் சென்று கொண்டேயிருந்தபோது, எட்ட இருந்து யாரோ ஒரு கயவன், செருப்பு ஒன்றை வீசி எறிந்தான். கழகத் தோழர் ஒருவர், கையில் கிடைத்த அதை வீணாக்காமல், ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் படத்தின்மேல் செருப்பால் அடித்துக்கொண்டே வந்தார். இந்தப்படிச் செய்ய எந்தவிதமான திட்டமும் கிடையாது; ஆனால் இதைத்தான் பின்னர் பார்ப்பனப் பத்திரிகைகள் பெரிதுபடுத்தின!

மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் டி.வி. சொக்கப்பா எம்.ஏ.,எல்.டி; தலைவர் பெரியார்; திறப்பாளர் ஜி.டி. நாயுடு மூட நம்பிக்கைக்குப் பெரியார் (definition) இலக்கணம் கூறினார். Observation and experiment இரண்டுக்குமே உட்படாதது மூடநம்பிக்கை என்றார். மத உணர்ச்சியைப் புண்படுத்துவதாகக் கூறும் இ.பி.கோ. சட்டத்தை எடுத்துவிட வேண்டும்; கடவுளுக்கும் மதத்துக்கும் அரசு பாதுகாப்புத் தரக்கூடாது; சுப்ரீம் கோர்ட்டை எடுத்துவிட வேண்டும்; பார்ப்பனப் பத்திரிகைகளைப் பகிஷ்காரம் செய்து புறக்கணிக்க வேண்டும்; ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது - என முற்போக்கான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேறின. இதில் கடைசித் தீர்மானத்தை, மனம் போன போக்கில், அயோக்கியத்தனமாகப் பொய்யாகத் திரித்துக் கூறிவிட்டார்கள் என்றார் பெரியார். இதை அவ்வாறு தவறாக வெளியிட்ட “இந்து", "இந்தியன் எக்ஸ்பிரஸ்", "தினமணி" பத்திரிகைகள் மீது வழக்குத் தொடரப்பட்டது. 1-2-71-ல் அவர்களுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டது. 9-ந் தேதி அய்ந்தாவது மாகாண மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வழக்குத் தொடங்கியது. இடையில், வழக்கு நடைபெறும் போதே, “இந்து”ப் பத்திரிகை மீண்டும் பழைய முறையிலேயே ஒரு தடவை அந்தத் தீர்மானத்தைப் பிரசுரித்ததற்காகச், சென்னை உயர்நீதி மன்றத்தில், அவமதிப்பு வழக்குத் தொடுத்தபோது, 16-3-71 அன்று, “இந்து” நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியது.

30-1-71-ல் திருவாளர்கள் வி. ராமசாமியும், என். எஸ். ராமசாமியும் அய்க்கோர்ட் ஜட்ஜானார்கள். 18-ல் 15 பேர் தமிழராகி விட்டார்கள்; ஏன் பார்ப்பனருக்கு ஆத்திரம் வராது? என்று கேட்டார் பெரியார். 31-1-71-ல் சென்னையில் கா. து. நடராசன் தலைமையில் நடந்த பகுத்தறிவாளர் கூட்டத்தில் கா. திரவியம் அய்.ஏ.எஸ்., கி.வீரமணி, பெரியார், சி.பி. சிற்றரசு ஆகியோர் உரை நிகழ்த்தினர்.