பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

559


காமராஜர் சரணாகதி அடைவதா? தமிழராட்சி ஏற்படத் தமிழர்களான தி.மு.க.வுக்கே வோட்டளியுங்கள். ஆதாரமற்ற செய்தி பிரசுரித்த Hindu, Indian Express, தினமணி மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டது. வோட்டர்களே! ஆதாரமற்ற செய்திகளை நம்பாமல் தி.மு.க.வுக்கே ஓட்டளியுங்கள் - என்கிற வாசகங்கள் "விடுதலை" யை நிறைத்தன.

12-2-71-ல் “பொறுமையாய் இருங்கள் தோழர்களே” என்ற தலையங்கத்தில் பெரியார் எழுதினார்:- “சேலம் மாநாட்டைச் சாக்காக வைத்து, தி.மு.க.வை வரவிடாமல் செய்ய முயலுகிறார்கள். மக்கள் இன்று இருக்கின்ற மனப்பக்குவமான நிலையில், அவர்களை ஒன்றும் அசைக்க முடியாது என்கிற தைரியம் எனக்கு உண்டு. ரஷ்யாவில் பாதிரியார்களைக் கொன்று, மாதா கோயிலை வெடிவைத்துத் தகர்த்து, சிலுவைகளைப் பிளந்து நெருப்பிலிட்டுக் கொளுத்தி, வேதங்களையும் தீயிலிட்டு எரித்தார்களே. அங்கு என்ன கெடுதல் வந்து விட்டது? இப்போது, நம்மால் ஏதாவது கலவரம் மூண்டு விட்டால், பார்ப்பானுக்கு அது லாபமாகிவிடும். ஆகையால் என்னதான் ஆத்திர மூட்டினாலும் பொறுமையாக இருங்கள்!” என்று பெரியார் தமது தோழர்களைக் கேட்டுக் கொண்டார். ஆனால் எதிரிகள் சும்மாயில்லையே! பெரியார் கொடும்பாவி கொளுத்தினார்கள். சிலையில், உருவப் படத்தில், செருப்படி நடத்தினார்கள். அப்போதும் பெரியார் என்ன எழுதியிருந்தார் - “என் உருவத்தை மட்டுமல்ல; என்னையே செருப்பால் அடித்தாலும், லட்சியமோ கவலையோ கொள்ளாதீர்கள்! இது நமக்குப் புதிதல்ல. இதெல்லாம் கிடைத்தால்தான் நமது கொள்கையில், லட்சியப் பாதையில் நாம் வேகமாய்ச் செல்வதாக அர்த்தம். இதற்குப் பதில் காரியமாக, எதிரிகள் வெட்கப்படும்படி, தி.மு.க. வெற்றி பெறச் செய்யுங்கள், போதும்" என்றுதான்!

மணியம்மையாருக்குக் கொஞ்சம் ஆத்திரம் மூண்டுவிட்டது. “தாய்மார்களே, சிந்தியுங்கள்! பார்ப்பனர் முயற்சியால் பெரியார் படத்தையும், சிலையையும் செருப்பால் அடிக்கிறார்களாம் பெரியார் இல்லாவிட்டால் நமக்கு ஏது இந்த உயர்நிலை என்று எண்ணிப் பார்த்துப் பெரியாருக்கு நன்றி பாராட்டச் சொல்லவில்லை உங்களை. தேர்தலில் உங்கள் கடமை என்ன? சிந்தித்துப் பாருங்கள்! நமக்கு அனுகூலமான ஆட்சி ஏற்பட வேண்டாமா, என அன்புடன் கேட்கிறேன்!” என்பதாக ஒரு பெட்டிச் செய்தி 18-ந் தேதி அம்மா அவர்களின் பெயரில். “ஒரு ஆரியனாவது தவறியும் திராவிடன் பக்கம் இருக்கிறானா? திராவிட மாணவர்களே! நீங்கள் இதிலாவது ஆரிய மாணவர்களைப் பார்த்து நடந்து கொள்ளுங்கள்! இனி ஆரியர் திராவிடர் வெளிப்படையாக இரண்டாய்ப் பிரிய வேண்டியதுதான்" என்று 19-ந் தேதி பெரியார் எழுதியிருந்தார். 17-ந் தேதியன்று திருச்சியில், மாணவர்கள் திரளாக வந்து பெரியாரைச் சந்தித்துத், தமது