பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

563


செய்தார். நீதிபதி ராமப்ரசாதராவ் அவர்கள், தவறாகாது என 21-5-71-ல் தீர்ப்பளித்தார்.

மது விலக்கு நீடிப்பால் மக்களுக்கு எவ்வித நன்மையுமில்லை எனப் பெரியார் எழுதினார். "கடவுள் இழிவு" பற்றித் தனது தர்மசங்கடமான நிலை குறித்தும் 28-ந் தேதி பெரியார் ஒரு தலையங்கம் தீட்டினார்:- "இராமனை இழிவுபடுத்தியதாக என்மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு நான் இதுவரை எந்த விதமான பதிலோ சமாதானமோ சொல்லவில்லை. அதற்குக் காரணம் தி.மு.க. விஷயத்தில் எனக்குள்ள தாட்சண்யம்தான். பல ஊர்களிலும் எனது தோழர்கள் இந்தப்படியாக இராமனை அல்லது கடவுளை இழிவு செய்யப்படவே விரும்புகிறார்கள். போலீசார் அங்கெல்லாம் தலையிட்டு, நிறுத்திவிடுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். இப்படிக் கேட்டுக்கொள்வதும், தடை செய்வதும் ஒன்றுதான் என நான் நினைக்கிறேன். இந்தக் காரியங்களுக்கு இது அனுகூலமான காலம். இது வெறும் ஆத்திக நாத்திகப் பிரச்சினையே அல்ல. மானவமானப் பிரச்சினை. இவற்றைச் செய்வதில் எனக்கு மக்கள் ஆதரவு நிரம்ப உண்டு. இது சம்பந்தமாய் ஆட்சியாளர்க்குச் சந்தேகம் வேண்டாம். இப்படி ஏதாவது நான் செய்யாமலிருந்தால் மக்கள் என்னைக் கைவிட்டு விடுவார்கள்!" என்பதாக.

1-4-71 அன்று இரவு 11 மணிக்கு சென்னை பொது மருத்துவ மனையில் பாவலர் பாலசுந்தரம் மறைந்தார். 3-4-71-ல் அவர் சடலம் கண்ணம்மா பேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. 2, 3 தேதிகளில், “நாளை ஸ்ரீ ராம நவமி. ராமன் படத்தை உங்கள் வீடுகளில் கீழே வைத்துச் செருப்பால் அடித்துவிட்டு, விரும்பினால் உங்கள் பெயரைக் கொடுங்கள். வெளியிடலாம்" எனப் பெரியார் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இராமன் படத்தைச் செருப்பாலடித்தோர் பட்டியல் 7-4-71-முதல் 22-4-71 வரை “விடுதலை"யின் கடைசிப் பக்கத்தை நிறைத்து வந்தது. 4-4-71 அன்று, சுயமரியாதைத் திருமணங்கள் புதுச்சேரி ராஜ்யத்திலும் சட்டப் பிரகாரம் செல்லு படியாகுமெனச் சட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல், மே, மாதங்களில் பெரியார் இடையறாத சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மதுரையில் பகுத்தறிவாளர் கழகம் துவங்கப்பட்டபோது, பெரியார் முன்னிலையில் பெண்கள் ஒன்றுகூடி, சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்பதாகக் கூறினர். பார்ப்பன ஏடுகளுக்கும் அங்கே தீயிடப்பட்டது.

கவிஞர் சலகண்டபுரம் ப. கண்ணன் (முன்னாளில் ஜே.பி. கிருஷ்ணன்) 21-4-71 இரவு 9-30-க்கு மறைந்தார். “ஆரம்ப காலத் தொட்டுக் கடைசிவரை கொள்கைக்காகப் பாடுபட்டவர். இலட்சியவாதி. சிறந்த சீர்திருத்த எழுத்தாளர்” எனப் பாராட்டி