பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

564

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


இரங்கலுரைத்தார் பெரியார், பி. சபாநாயகம், அய்.ஏ.எஸ். தலைமைச் செயலாளராகவும், சி.ஜி. ரங்கபாஷ்யம் அய்.ஏ.எஸ். மின்வாரியத் தலைவராகவும் 8-4-71-ல் நியமிக்கப்பெற்றனர். புரட்சிக் கவிஞரின் 80-வது பிறந்த நாளை ஓட்டி 29-4-71 அன்று புதுவை அரசு விடுமுறை வழங்கியது. பாரதிதாசன் இல்லத்தை அரசுடைமை ஆக்கி அங்கே நூலகமும் அமைத்தது. 1-5-71 முதல் மதுரை நகராட்சி, மாநகராட்சி அந்தஸ்து பெற்றது. மதுரைக் கார்ப்பரேஷன் முதல் மேயராக எஸ். முத்து நியமிக்கப்பெற்றார். (சென்னை கார்ப்பரேஷன் முதல் மேயர் குமாரராஜா M.A, முத்தையா செட்டியார்) 2-5-71 அன்று இராஜாஜி வீட்டு முன்னர், அவர் பென்ஷன் வாங்கக் கூடாது; தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2-5-71-ல் தஞ்சையில் பெரியார், பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி வைத்தார். 7-ந் தேதி சென்னையில், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அமைச்சரவைக்குப் பாராட்டுவிழா பெரியார் திடலில் நடைபெற்றது. முதல்வர் கலைஞரும் அமைச்சர்களில் நாவலர் நெடுஞ்செழியன், அன்பில் தர்மலிங்கம், சத்தியவாணிமுத்து ஆகியோடும் பகுத்தறிவாளர் கழகத்தின் உறுப்பினர் ஆயினர்.

திருவாரூரில் 15-5-71 அன்று பகுத்தறிவாளர் மாநாடு: தலைவர் வீரமணி; திறப்பாளர் உலகநம்பி எம்.ஏ.பி.எல். எம்.பி. ரெங்கராசு திடலில், சிங்கராயர் பந்தலில், முத்துக்கிருஷ்ணன் அரங்கில் மறுநாள் திராவிடர்கழக மாநாடு பெரியார் தலைமையில், T.V. சொக்கப்பா எம்.ஏ. எல்.டி திறப்பாளர். வி.எஸ்.பி. யாகூப் மன்றத்தில் பகுத்தறிவுப் புத்தகக்காட்சி, ஓவியக் காட்டு நடைபெற்றது. 16-5-71 அன்று மாபெரும் ஊர்வலம் புறப்படத் தயாராயிருந்த நேரத்தில், பெரியார் தங்கியிருந்த முசாபுரி பங்களாவுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் டி.வி. அந்தோணி அய்.ஏ.எஸ் (முன்னாள் தலைமைச் செயலாளர் டி.ஏ. வர்கீசின் மகன்) வந்து, பெரியாரைச் சந்தித்து, ஊர்வலத்தில் இராமன், சீதை ஆகிய உருவங்களை எடுத்துச் செல்லக்கூடாது, என்றார். அதில்லாமல் எங்கள் கொள்கை நிறைவேறாதுங்களே என்றார் பெரியார். அப்படியானால் ஊர்வலத்தை அனுமதிக்க முடியாதே. என்றார் கலெக்டர். எழுத்து மூலமான உத்தரவு தருவீர்களா என்று பெரியார் கேட்கவும், அங்கேயே டைப் செய்து கையெழுத்திட்டு, மாவட்டக் கலெக்டர் மற்றும் மாஜிஸ்டிரேட் என்கிற தகுதிகளில், திராவிடர் கழக ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பதாக ஆணை பிறப்பித்து, நகலைப் பெரியாரிடம் தந்தார். மேலிடத்தின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு நடைபெறாது என யூகித்தார் பெரியார்! அப்போது பெரியார் கூறிய ஒரு பழமொழியைக் கேட்டு ஆத்திரமாயிருந்த தோழர்களும் சிரித்துவிட்டனர். “என்ன செய்வது மாமியாருக்குத் தொடையிலே புண், மருமகன்தான் டாக்டர்!” என்றார் பெரியார். தங்கும் விடுதிக்கு வெளியே உணர்ச்சிப் பிழம்புகளாய்க்