பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

565


கொதிக்துக் கொண்டிருந்த கருஞ்சட்டையினரைத் தாமே அமைதிப் படுத்தி, ஊர்வலம் ரத்து என அறிவித்து, நேரே மாநாட்டைத் துவக்கினார்.

“இன்னும் 15 நாளில் இராமாயணம் தடைசெய்யப்பட வேண்டும். தவறினால் விபச்சாரி சீதை, குடிகார ராமன் சூத்திர சம்பூகன் வெட்டிக் கொல்லப்படுதல் - இந்தக் காட்சிகள் தமிழ் நாடு முழுவதும் ஊர்வலமாக எடுக்கப்படும்” என்ற ஏகமனதான ஒரு தீர்மானம் எழுச்சி மயமாக நிறைவேற்றப்பட்டது, திருவாரூரில் 16-5-71 அன்றையதினம்!

அடுத்த 17, 19 தேதிகளில் "விடுதலை"யில் ஆசிரியர் தலையங்கம் மிகுந்த வேதனையுடன் தீட்டப்பட்டிருந்தது. 18-ந் தேதி புலவர் குழந்தையின் இராவண காவியம் நூல் மீதிருந்த தடை, அரசால் நீக்கப்பட்டது. பத்திரிகை நிருபர்கள் கேட்டபோது, முதல்வர் கலைஞர், இனியும் “சேலம்" நடந்தால் “திருவாரூர்" நடக்கும் என்றார்; அதாவது, இராமன் உருவம் ஊர்வலத்தில் இழிவு செய்யப்படுமானால், தி.க. ஊர்வலமே தடை செய்யப்படும் என்ற பொருளில்! “அரசின் இந்தப் போக்கு விரும்பத்தக்கதல்ல என்ற கசப்பான உண்மையைச் சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமையாகிறது. நாம் நடத்தும் ஊர்வலம் எதிரிகளைப் புண்படுத்த அல்ல; நம்மவர்களுக்கு ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றவே சேலம் நடந்தால் திருவாரூர் நடக்குமென்று முதல்வர் கூறிவிட்டதாகச் சிண்டு முடிவோர் ஏமாறுவர். அரசு கடமையாற்றட்டும். நாமும் செயலாற்றுவோம். அடுத்து ஒரு மாநாடு கூட்டி, வேலைத் திட்டம் வகுப்போம்!" என்றார் வீரமணி. 21-ந் தேதி பெரியாரோ - “நான் தி.மு.க. அமைச்சர்களை மதிக்கவில்லையா? பிறகேன் இந்த முடிவு? தி.க.வை ஒடுக்கும் திட்டமா? ஆட்சியின் காரியத்துக்காக நான் இவற்றைக் கைவிட முடியுமா? அப்படிச் செய்தால் திராவிடர் கழகத்தை நானே கொல்லுபவன் ஆவேன்!" என்று மனம் பொருமினார். அரசின் போக்கைக் கண்டித்துத் திராவிடர் கழகத் தோழர்கள் மனங்குமுறி ஆத்திரத்துடன், இரத்தக் கண்ணீர் வடித்து, எழுதிய எண்ணற்ற கடிதங்கள் "விடுதலை"யில் “ஆசிரியருக்கு" என்ற பகுதியில் தினந்தோறும் நிறைந்தன.

22-5-71 நாத்திகர் மாநாடு; தலைவர் எஞ்சினியர் கே.எம். சுப்பிரமணியம் பி.இ. திறப்பாளர் ஜி.டி. நாயுடு. 23-ந் தேதி பார்ப்பனரல்லாதார் மாநாடு. தலைவர் பெரியார்; திறப்பாளர் டி.வி. சொக்கப்பா. திருச்சியில் சிந்தனையாளர் கழகம் நடத்திய இந்த மாநாடுகளில் “மது விலக்கைக் விரைந்து நீக்க வேண்டும். சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மதுவிலக்கு நீடிக்க வேண்டும் என்று சொல்ல உரிமையில்லை. திராவிடர் கழகக் கொள்கைகளை,