பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

566

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஆட்சிக்குச் சென்று சாதிக்கக்கானே திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்தது. பிறகென்ன தயக்கம் என்று பெரியார் கருத்துரைத்தார். திருக்கோயிலூர் அருகே உள்ள சென்னகுனம் கிராமத்தில் இப்போது தி.மு.க. ஆட்சியாளர் ஓடாத தேரையெல்லாம் ஓட வைக்கக் காரணம், பார்ப்பானின் செல்வாக்குக்கு அரசு இன்னும் பயப்படுகிறது என்பதுதான். வேதம் ஒழியும் இடத்தில்தானே பேதம் ஒழியும். கடவுளைச் செருப்பால் அடிப்பதால் நமக்கு ஒன்றும் கேடு நேர்ந்து விடாது என்பதற்கு என் வயதே சான்று!" என்று மொழிந்தார் பெரியார்.

சேலத்தில் இராமனுக்குச் செருப்படி தந்ததாகப் பெரியார் மீதும் ஒருவர் வழக்குத் தொடர்ந்தனர். கோர்ட்டில் 4-6-71-ல் அது தள்ளுபடி செய்யப்பட்டது.“கல்கியார் கனைக்கிறார்” என்பதாக “விடுதலை"யில் 4-ந் தேதி ஒரு தலையங்கம்; இராமாயணத்தைத் தடை செய்ய முடியாது என்பதால் இராவண காவியம் நூலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைத் தாம் நீக்கியதாக முதலமைச்சர் கூறினாராம், என்பதை விளக்கி இராமாயணம் தடை செய்யப்படவேண்டும் - ஏன் என்கிற தலைப்பில் தினம் சில காரணங்களை விவரித்து "விடுதலை"யில் பெரியதொரு பெட்டிச் செய்தி அந்த மாத முழுவதும் வெளியிடப் பெற்றது. பெரியாரின் உடல் நிலை கருதி அவரைக் குறைவான நிகழ்ச்சிகளுக்கே அழைக்க வேண்டுமென்கிற கருத்திலும் பெட்ரோல் விலை உயர்வாலும் இனிமேல் பெரியாரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைப்போர் ரூ.200/-ம், திருமணங்களுக்கு அழைப்போர் ரூ.250/-ம் அனுப்ப வேண்டுகிறோம் என்பதாக வீரமணி 6- 6-71-ல் அறிவித்தார். "பெரியாரின் பகுத்தறிவுப் படை மூட நம்பிக்கைகளுக்குக் கொடுத்த சவுக்கடி, நயவஞ்சகர்களைக் கலகலக்க வைத்தது. அப்படிப்பட்ட பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குத் தகுந்த ஆதாரங்களைத் திரட்டி வழங்கியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்" என்று முதல்வர் கலைஞர் 6-ந் தேதி இராயபுரம் சிங்காரவேலர் படகு கட்டும் நிலையம் திறந்தபோது கூறினார்.

14-ந் தேதி பெரியார் நாச்சியார்கோயிலில் பேசும்போது, 10 கல்லூரிகளைத் திறப்பதைவிட எல்லாக் கிராமங்களிலும் உயர்நிலைப் பள்ளிகளைத் திறக்கலாம்; கல்லூரிகளால் எப்போதும் தொல்லைதானே? என்றார். 25-6-71 அன்று பேளுக்குறிச்சி ஜி.பி. சோமசுந்தரம் மறைந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்திலும் கருப்புச் சட்டையை விடாமலிருந்த பெரியவர் இவர். அன்றைய தினம் பெரியார் பொள்ளாச்சியில் பேசும்போது கீதையையும் கிருஷ்ணனையும் செருப்பாலடிக்காமல் நாம் ஏற்றுக்கொண்டால் என்றென்றும் சூத்திரர்தானே? என்று கேட்டார் மதுவிலக்கு ஆகஸ்டு 30 முதல் ரத்தாகும் என்பது துணிச்சல் மிக்க முடிவு என "விடுதலை" 19-6-71-ல் எழுதிற்று. இந்த முடிவைப் பாராட்டி ஏராளமான கடிதங்கள் வெளிவரத் தொடங்கின.