பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

567



திருநெல்வேலி மாவட்டத்துச் செய்துங்கநல்லூரில் தேவேந்திர குல வேளாளர் கல்லூரிக்கு 4-1-71 அன்று பெரியார் அடிக்கல் நாட்டினார். பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவின் அறிக்கை வெளியாகியிருந்தது. அரசுத் துறைகளில் மட்டுமின்றிப் பொதுத் துறைகளிலும், தனியார் துறைகளிலுங்கூட இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென அதில் பரிந்துரைக்கப்பட்டதைப் பாராட்டிப், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ஒரு பொற்காலம், என்று "விடுதலை" 16-7-71 அன்று கலையங்கம் தீட்டிற்று. பிற்படுக்கப்பட்டோர் நல விழாக்கள் நடத்தப்படுமா?, என கிட்டப்பா எல்.எல்.ஏ. கேட்டபோது, சட்டமன்றத்தில், 6-7-71 அன்று, அமைச்சர் ராஜாராம், அன்றாடம் நாட்டில் நடைபெற்று வரும் பெரியார் பொதுக் கூட்டங்களும், அண்ணா - கலைஞர் பிறந்த நாள் விழாக்களும் உண்மையில் பிற்படுத்தப்பட்டோர் நல விழாக்களே ஆகும். எனவே தனியாக விழாத் தேவையில்லை என்றார்! The Modern Rationalist என்ற ஆங்கில மாத சஞ்சிகைக்கு ஆசிரியராக வீரமணியும், அச்சிடுவோராக ஈ.வெ.ரா. மணியம்மையாரும் என 8-7-71 அன்று பதிவு செய்யப்பட்டது.

சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளரும், கழகப் பிரமுகரும், மிக்க ஆர்வமுள்ள இளைஞருமான ஆர்.வி. கணபதி சென்னையருகில் கார் விபத்தில் 10-7-71 அன்று காலமானார். பகுத்தறிவுச் சுடர் நாவலர் நெடுஞ்செழியன் 52-வது பிறந்த நாள் இன்று என, “விடுதலை" 11-7-71-ல் வாழ்த்தியிருந்தது. பெரியார் 15-ந் தேதி தஞ்சையில் House Surgeons Association -ல் சொற்பொழிவாற்றினார். அன்றைக்கே தஞ்சையிலுள்ள திறந்த வெளிச் சிறைச் சாலையினையும் பார்வையிட்டார். தன்னுடைய ராஜிநாமாவை ஏற்கக்கூடாது எனச் சட்டமன்ற மேலவை உறுப்பினராயிருந்த எஸ். இராகவானந்தம், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட்மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது, 15-ந் தேதியன்று மேலவை உறுப்பினரான தவத்திரு குன்றக்குடி அடிகளார், ரஷ்ய சுற்றுப்பயணத்திற்காக 18-ந் தேதி புறப்பட்டபோது, மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசு, கி. வீரமணி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இதுவரை தான் எந்தக் கோயிலுக்கும் போனதில்லையென, 25-ந் தேதி ஒரு தன்னிலை விளக்கமளித்தார் மேலவைத் தலைவர் சி.பி.சி.

23-7-71 அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிற்று. பகுத்தறிவுக் கொள்கைக்கு அளிக்கப்பட்ட விருது என "விடுதலை" பாராட்டியது. “எதிரிகளுக்குக் காலித்தனமின்றி கதி இல்லை” என்ற தலையங்கத்தில் 24-ந் தேதி பெரியார், “அண்ணாமலை நகரில் பார்ப்பனர் பின்னணியில் இருந்து கொண்டு மாணவரைத் தூண்டி விட்டுக் கலவரம் விளைவித்திருக்கின்றனர். போலீசார் துப்பாக்கிப்