பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

568

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பிரயோகம் செய்யாமலே சாமர்த்தியமாகச் சமாளித்ததைப் பாராட்டியே ஆகவேண்டும். தமிழர்களே பொறாமைக்காரர்கள் இப்படி, எரியும் பந்தத்திற்கு நெய்யூற்றி வருகிறார்களே! உங்கள் கடமை என்ன? பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கலாமா?" என்பதாக எழுதியிருந்தார். துணைத் தலையங்கத்தில், பட்டமளிப்பு விழாவில் பகுத்தறிவு வெள்ளம் பாய்ச்சிய கலைஞர் கருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 24-7-71 அன்றைய தினமே முதல்வர் கலைஞர் சென்னை பொது மருத்துவமனையில் பெரியாரைச் சந்தித்தார். பெரியாரும் டாக்டர் கலைஞரைப் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். 28-7-71 அன்று சட்ட மன்றத்தில் டாக்டர் அண்டே , இது நாலாந்தர அரசு என்று, குற்றஞ் சுமத்திப் பேசினார். முதல்வர் கலைஞர் எழுந்து, "ஆமாம் இது நாலாந்தர மக்களுக்காக நாலாந்தர மக்களால் நடத்தப்படும் அரசுதான். பெரியார் மொழியில் சொல்கிறேன்; நாலாஞ் சாதி சூத்திரர்கள் ஆட்சிதான் நடக்கிறது!" என்று கல்மேல் எழுத்தாய்ப் பொறித்தார்.

27-ந் தேதி சட்டமன்றத்தில் கேள்விக்குப் பதிலாக, அறநிலைய அமைச்சர்; இருக்கின்ற 5,000 கோயில்களில், இப்போது 3,000 இடங்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறுகிறது என்ற தகவல் தந்தார். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி 5-8-71 நள்ளிரவில் அடையாறு இல்லத்தில் தமது 57 வது வயது மரணமடைந்தார். மறுநாள் இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர்கள், கலையுலக நண்பர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டனர். ஒரு நாள் இரவில், பெரியாரின் வேன் ரிப்பேராகி, வழியில் நிற்கக் கண்ட கே.ஆர். ராமசாமி, தம்முடைய காரில் வரச்சொல்லி, மிக அன்புடன் அழைத்தும், பெரியார் தமது வழக்கப்படி, நன்றியுடன் மறுத்து விட்டார். எனினும் சில நாள் கழித்துக் கே. ஆர். ஆர். இல்லம் தேடிச்சென்று, அவரது அன்புக்கு நன்றி பாராட்டித், திரும்பினார் பெரியார். கலையுலகில் தன்னை அழித்துக்கொண்டு, மற்றவர்க்கு ஒளி காட்டி உயர்த்திய வள்ளல் கே.ஆர்.ஆர். உருகிக் கரைந்து போன மெழுகுவத்தியானார்! 14-8-71 அன்று பெரியாரும், மணியம்மையாரும் சென்று, கே.ஆர். கல்யாணி, அம்மையாரையும், பிள்ளைகளையும் கண்டு துக்கம் விசாரித்தனர்.

“இதுதான் பாரதம்” என்ற தலைப்பில், மகாபாரத இதிகாசத்தின் பல்வேறு ஆபாசக் கருத்துகள், நாள்தோறும் “விடுதலை”யில் கட்டங்கட்டி வெளியிடப்பட்டு வந்தன. 4-8-71-ல் சேலத்தில் முதல்வர் கலைஞர், பெரியாரைப் பற்றிப் பெருமை பொங்கக் குறிப்பிட்டார்: இந்தத் தொண்ணூற்று மூன்றாவது வயதிலும் தன்னைப் படாதபாடு படுத்திக்கொண்டு தமிழர்களுக்குத் தன்மானம் ஊட்டி வருகிறார் பெரியார். ‘ஏன் அய்யா உடம்பு சரியில்லையாமே?’ என்று விசாரிக்கச்