பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

570

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


17-9-71 அன்று பெரியார் சிலை ஈரோட்டில் நிறுவப்படும் என்றும் 26-9-71 அன்று சேலத்தில் அன்று சேலத்தில் வெள்ளிச் சிம்மாசனம் வழங்கப்படும் என்றும் முன்னதாகவே செய்திகள் வெளியாயின. லால்குடி வட்டம் திருமங்கலம் கிராமத்தில், பெரியார் மின்விளக்கேற்றிய போது. "பள்ளிகளில் தருவது போலக் கல்வரிகளிலும் மதிய உணவு தந்தால், நம் பிள்ளைகள் இன்னும் பலர் உயர்கல்வி பெற முடியும். இப்போது நடந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் தேர்ந்தெடுப்பதில் 1,000க்கு 950 பேர் நம் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் இந்த ஆட்சியில், என்று மகிழ்ந்தார் பெரியார். “திராவிடர் கழகம் ஏற்பட்டது கடவுளை ஒழிப்பதற்காக அல்ல; இன இழிவை ஒழிப்பதற்குத்தான். ஆனால் நம் இன இழிவை ஒழிக்கும் பணியில் கடவுள் குறுக்கிடுவதால், அதை ஒழிக்க முற்படுகிறோம்" என்று பெரியார் தாதம் பேட்டை பழுவூரில் கூறினார்.

துவாரகையிலுள்ள சாரதா பீடம் சங்கராச்சாரியாரின் விழாவில் கலந்து கொள்ளத் துணை ஜனாதிபதி ஜி.எஸ். பாடக் மறுத்துவிட்டார்; காரணம், அவர் தீண்டாமையை ஆதரிப்பவர் என்பதால் இந்தச் செய்தியை "விடுதலை" வெற்றியுடன் பிரசுரித்தது. நாகரசம்பட்டி தன்மானக் குடும்பத்தின் தலைமை மூதாட்டியும் என்.வி. சுந்தரம் சகோதரர்கள், என்.வி. விசாலாட்சி அம்மாள் சகோதரிகள் ஆகியோரின் தாயாரும், என்.எஸ். சம்பந்தம் சகோதரர்களின் பாட்டியாருமான தாயாரம்மாள் 15-8-71 அன்று மறைந்தார். அவரது நினைவு நாளான 29-8-71 அன்று பெரியார், அம்மையாரின் படத்தினைத் திறந்து வைத்துத், தமது கொள்கையில் அன்னாருக்கிருந்த ஈடுபாட்டை நினைவு கூர்ந்தார்.

சென்னை பாலர் அரங்கத்தில் கலைவாணர் நினைவுநாள் விழா 4-9-71 அன்று கொண்டாடப்பட்டது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி ஆகியோருக்குப் பகுத்தறிவுப் பாடல்கள் இயற்றித் தந்தவரும், பெரியாரின் நண்பரான உடுமலை முத்துசாமிக் கவிராயரின் சீடருமான உடுமலை நாராயணக் கவிராயருக்கு, முதல்வர் கலைஞர் 15,000 ரூபாய் பொற்கிழி வழங்கினார். “உயிரும் மயிரும் இல்லா உருவச் சிலைகளுக்கு வயிர முடிகள் வேணுமா? வாயும் வயிற்றில்லாச் சாமிக்கு மானியமாகவே வயலும் வாய்க்கால் வேணுமா?” என்பது போன்ற அறிவார்ந்த பாடல்களை அவர் இயற்றித்தர, நடிகமணி டி.வி. நாராயணசாமி, கணியூர் கே.ஆர். செல்லமுத்து போன்றோர் இயக்க மேடைகளில் இசையோடு முழங்க... வாழ்க, உடுமலைக் கவிராயர்! அன்று மாலை, விழாவில், பாலர் அரங்கத்துக்குக் கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டுவதாக, முதல்வர் கலைஞர் அறிவித்தார். மறுநாள் காலையே, நியான் சைன் போர்டில், கலைவாணர்