பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

574

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



மற்றும் நான் நினைக்கின்றேன். அண்மையில் ஓர் மாநாடு கூட்டிக், கோயில்களுக்குப் போகிறவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வதன் மூலம், போகாமல் இருக்கச் செய்யலாமா என்று யோசனை கேட்டுக் காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன்."

இதுதான் பெரியாரின் 93-வது பிறந்த நாள் விண்ணப்பமாகும்.

10-10-71 அன்று திருச்சியில் சிக்கனையாளர் கழகம் பெரியாரின் 93- வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியது. கே.எம். சுப்பிரமணியம் பி.இ., கோவிந்தராஜலு, ஆனைமுத்து ஆகியோர் முயற்சியில் பெரியாருக்கு வெள்ளித்தட்டு, வைரமோதிரம் ஆகியவை வழங்கப் பெற்றன. விழாவில் அன்பில் தர்மலிங்கம், சத்தியவாணிமுத்து, எஸ். இராமச்சந்திரன், Dr. வி.சி. குழந்தைசாமி, மா.கி. தசரதன், என். திருஞானசம்பந்தம் பி.இ., கே.வி. சுப்பய்யா, கி. வீரமணி ஆகியோர் பெரியாருடன் பங்கேற்றனர். அன்று மாலை பெரியார், பொதுக் கூட்டத்தில், “நான் இப்போது பதினான்கு அமைச்சராக அல்லவா இருக்கிறேன்' என்றார். இரவு 7-15 மணிக்குத் தி.பொ. வேதாசலனார் மறைந்ததாகச் செய்தி கிடைத்தது. மறுநாள் காலை பெரியார், மணியம்மையார், ரங்கம்மாள் சிதம்பரம், என்.எஸ். சம்பந்தம் ஆகியோர் 9 மணிக்குத் தென்னூரில் வேதாசலனார் இல்லம் சென்றனர். அன்று மாலை 6 மணிக்கு இடுகாட்டிலும் பெரியார் இரங்கலுரை ஆற்றினார். பழைமையை நினைவு கூர்ந்து மிகவும் வேதனைப்பட்டார்.

பர்மாவில் பெரியார் சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்று தோற்றுவிக்கப்பட்டு, நல்லவிதமாக அது செயல்படத் துவங்கிற்று. “இப்போது ஏன் கடவுள் அவதாரம் எடுப்பதில்லை ? நாட்டில் கொடுமைகள் நடக்கவில்லையா என்ன? மனிதனுக்கு இப்போது அறிவு வளர்ந்து விட்டது என்பதற்குச் சான்றுதானே அது" என்று பரங்கிமலையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியார் வினவினார் 20-10-71-ல், வீரமணி ஓர் அறிக்கை வாயிலாகப், பெரியாரின் உடல் நிலை கருதி, அவர்களைப் பல முறை காரிலிருந்து இறங்கி இறங்கி ஏறாவண்ணம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள். கூட்ட மேடையில் பெரியார் அவர்களையும் உட்காரவைத்து விட்டுப், பலரை முன்னதாகப் பேசச் சொல்லிப், பெரியார் களைப்படைந்த பின்பே அவர்களைப் பேச அனுமதிக்காதீர்கள்! இதைத் தவிர்க்க, முன்னதாக அதிகமான தோழர் பேசாதபடி ஏற்பாடு செய்யுங்கள், என்றெல்லாம் அன்பு வேண்டுதல் தந்திருந்தார்.

பவானியில், இராவண காவியம் இயற்றிய புலவர் குழந்தை அவர்களுக்கு 6-10-71-ல் பெரியார் பொன்னாடை போர்த்தி, “இராவணகாவியம், இராமாயண ஆராய்ச்சி போன்ற நூல்களைப் பிள்ளைகளுக்குப் பாடமாக வைக்க வேண்டும்” எனக் கழறினார்.