பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

575


நெய்வேலி பொதுக்கூட்டத்தில் 17-ந் தேதி பெரியாருக்கு 93 கத்திகளை மாலையாகத் தொடுத்துச் சூட்டினார்கள். "ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த நேரத்தில், 1953-ல், நான் கேட்டேன், அப்போது ஒரு மாதத்திற்குள் எனக்கு 600, 700 கத்திகளை அன்பளிப்பாகத் தந்தார்கள் மக்கள். ஆனால் இப்போது கத்தி தேவைப்படவில்லையே" என்பதாகப் பகர்ந்தார் பெரியார்.

சட்ட மன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது முதலமைச்சர், பெரியாருக்கு அரசு விழா நடத்தவும். தபால்தலை வெளியிடவும் யோசனை இருப்பதாகவும், இதற்கு அனைத்துக் கட்சியாரும் சம்மதமளித்ததாகவும் கூறினார். 1-11-71 அன்று, சேலம் வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி, அய்க்கோர்ட்டில் Hindu, Indian Express, தினமணி சார்பில் மனுச் செய்யப்பட்டதை ஏற்காமல், 5வது மாகாண மாஜிஸ்ட்ரேட் தொடர்ந்து விசாரிக்கலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. நவம்பர் 1-ல் புதுச்சேரியில் பெரியார் சிலை வைக்க முடிவு செய்து, அங்கேயே 14,000 ரூபாய், உடனே வசூலாயிற்று.

சேலம் நேரு ஸ்டேடியத்தில் 4-11-71-ல் புதுமையான பெருவிழா; மாலை 5-30 மணிக்கு, அமைச்சர் கே. ராஜாராம் தலைமையில் பெரியாருக்குக் கலைஞர் வெள்ளிச் சிம்மாசனம் வழங்கல். ஈ.ஆர். கிருஷ்ணன் எம்.பி. வரவேற்றார். சேர்மன் பழனியப்பன், வீரபாண்டி ஆறுமுகம் எம்.எல்.ஏ., எம்.என். நஞ்சையா, மா. முத்துசாமி எம்.பி, செ. சுந்தப்பன் எம்.எல்.ஏ., கி. வீரமணி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். வெள்ளிச் சிம்மாசனத்தில் தந்தை பெரியாரைக் கலைஞர் அமர்த்தினார். எதிர்பாராதவிதமாகப் பெரியார் எழுந்து, கலைஞரை இழுத்து, அதில் அமர்த்திய காட்சி, பெருத்த ஆரவார ஆனந்தக்களிப்பினை வருவித்தது.

கலைஞர் அப்போது ஆற்றிய உரை:-

மனிதன் வாழ்விலே எல்லா நாட்களும் உணர்ச்சிமயமான கட்டங்கள் உள்ள நாட்கள் அல்ல. ஏதாவது உள்ளத்தைத் தொடும் சம்பவங்களும், வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்களும்தான் அவனை உணர்ச்சிமயமாக்கி வரும் நாட்களாகும்.

தந்தை பெரியாரவர்களை நான் வெள்ளிச் சிம்மாசனத்திலே அமரவைத்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். திரும்ப அவர்கள் என் கையைப் பிடித்திழுத்து என்னை அதில் உட்காரவைத்தபோது என் உடல் சிலிர்த்தது; நா தழுதழுத்தது; கண்கள் கண்ணீர் சிந்தின. உள்ளபடியே என்னால் பேச முடியவில்லை. மிகவும் உணர்ச்சி வயப்பட்டு இருக்கிறேன் இது என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத பொன்னாளாகும்.