பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

585


தென்றால், ஒருத்தி, ஒருபடி மிளகை அடுத்த வீட்டுக்காரியிடம் கொடுத்துவிட்டு, ஒரு டம்ளர் ரசத்துக்குப் பிச்சை கேட்டுக் கையேந்தி நின்றாளாம். அது போல இருக்கிறது என்ற அழகான எளிய உவமை கூறினார் பெரியார்.

5-2-72 சென்னை பொது மருத்துவ மனையில், சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின துணைத்தலைவர் கோட்டையூர் சிதம்பரம் அவர்கள், மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார். 1934-ல் இருவருக்கும், திருவண்ணாமலை ரங்கம்மாளுக்கும் பெரியார் தலைமையில் சுயமரியாதைக் கலப்புத் திருமணம் நடைபெற்றது செல்லாது எனப் பிறகு ஒரு முறை கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. சந்திரன், ஜெயம் என இரு ஆண்மக்களும், மோகனா - வீரமணி, சூரியகுமாரி - சம்பந்தம் என இரு பெண்மக்களும் இவருக்கு உண்டு. பெரியார் திடலில், அன்னாரின் சடலம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. செய்தியறிந்து பெரியார் விரைந்து வந்து சேர்ந்தார். முதல்வர் கலைஞர், அமைச்சர் ப.உ. சண்முகம் ஆகியோர் அனுதாபத் தந்தி அனுப்பியிருந்தனர். 6-2-72 காலை 10 மணிக்கு ஓட்டேரி இடுகாட்டில் அடக்கம் நடைபெற்றது.

11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து 28 பார்ப்பனர் செய்திருந்த ரிட்மனுமீது விசாரணை நடந்தது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் கோவிந்த சுவாமிநாதன் வாதம் புரிந்தார். 14-2-72 அன்று ஜார்ஜ் பெர்னாண்டஸ், பம்பாயில் நிருபர்களிடையே பரபரப்பான ஒரு செய்தியை வெளியிட்டதாக “விடுதலை" பிரசுரித்திருந்தது. தமிழகத்தில் கலைஞர் ஆட்சியைக் கவிழ்க்க, இந்திராகாந்தி சதி செய்வதாகவும், தி.மு.க.வில் முக்கியப் பொறுப்பிலுள்ள மூன்று பேரைப் போட்டித் தலைமைக்குத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விளம்பரம் வெளிச்சம் தரப்படுவதாகவும். பெர்னாண்டஸ் தெரிவித்தார். அந்த மூன்று பேர் யாரென்று தாம் சொல்வதற்கில்லை என்றார். எனினும் நிருபர்கள் ஊகம் ஓரளவு சரியாகவே இருந்தது. மூவரில் ஒருவர் அடுத்த சில மாதங்களில் வெளியேறித் தனிக் கட்சி தொடங்கினார்; இரண்டாமவர் 1977-ல் வெளியேறி, அந்த முகாமில் இப்போதுள்ளார்; மூன்றாமவர் இப்போதும் கலைஞரிடமிருந்தே செயல்படுகின்றார்!

15-2-72 அன்றிரவு, கொரடாச்சேரி கூட்டம் முடிந்து, மறுநாள் சின்னமனூருக்குச் செல்லப் புறப்பட்டபோது, பெரியாருக்கு வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. தஞ்சையில் மருத்துவக் கல்லாரி முதல்வர் டாக்டர் பூபதியிடம் செல்லவும், அவர் அங்கேயே பெரியாரைப் படுக்கையில் தங்கிடச் செய்தார். அதன் காரணமாக 16 சின்னமனூர், 17 ஒட்டன் சத்திரம், 18 போடி நாய்க்கனூர், 19 வேடசந்தார், 20 காரைக்குடி கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக,