பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

587


முடிந்தது. மேலும் பல நல்ல திட்டங்களை அறிவிக்க முடிந்தது. உச்சவரம்பை, ஒரு குடும்பத்துக்கு 10 ஸ்டாண்டர்டு ஏக்கரா எனக் குறைக்கலாம். குத்தகை பாக்கிச் சுமையை ரத்துச் செய்தது நல்ல காரியம், கிராமச்சாலை அமைப்பும் மிக முக்கியமானது" என்றெல்லாம் எழுதினார். 7-ந் தேதி விடுதலையில் எனது விண்ணப்பம் என்ற தலையங்கம் பெரியார் எழுத்தில் வடிக்கப்பட்டது:- “ஆட்சிக்குத் தொந்தரவு தராமல் ஏதாவது கிளர்ச்சி செய்ய வேண்டுமென நினைக்கிறேன். அரசியலில் செய்தால், உடனே நம்மையும் ஆட்சியையும் எதிர்க்க, மோகன் குமாரமங்கலம், சி. சுப்ரமணியம், காமராஜர், பக்தவத்சலம் கூட்டத்தார் கிளம்பி விடுவார்கள். அதனாலும், அதைவிடச் சமுதாயக் கிளர்ச்சி முக்கியம் என்பதாலும், சட்டத்தை மீறுவதா, அல்லது மறியல் செய்வதா, என்றெல்லாம் யோசனை செய்து வருகிறேன். தோழர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். 1 லட்ச ரூபாய் நிதியும், 10,000 தொண்டர்களும் இதற்காகத் திரட்டுவோம்!” என்று.

8-3-72 அன்று, அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்துக்குப் பதில் மன்னை நாராயணசாமி அமைச்சராக்கப்பட்டார். உடல் நிலை குன்றியதால் அன்பில் ராஜிநாமா செய்ததாக அறிவிக்கப்பட்டது. திருச்சியில் 11, 12 தேதிகளில் மூன்று மாநாடுகள் - திடுக்கிடும் தீர்மானங்கள் - திரளாக வாருங்கள்! என்று விளம்பரம் செய்யப்பட்டது. 11-3-72 காலை 9 மணிக்குத் திராவிடர் மாணவர் மாநாடு, வரவேற்பு டி.டி. வீரப்பா, தலைவர் எஸ். துரைசாமி, திறப்பாளர் வீரராக்கியம் கே. சின்னப்பன். ஜி.டி. நாயுடு, பூ.சி, இளங்கோவன் ஆகியோர் உரை அன்று மாலை 3 மணிக்குப் பெண்கள் விடுதலை மாநாடு. பிரபாவதி பி.ஏ., தலைவர்; வீரமணி, பராங்குசம், வெற்றிச் செல்வி, சக்தி கோதண்டம் பி.ஏ. சிறப்பு உரை. அன்பில் தர்மலிங்கம் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகள் வழங்கினார். மறுநாள் 12-3-72 காலை 9 மணிக்கு ஊர்வலம். இதில் மத சம்பந்தமான வேடமணிந்தவர்கள் ஊர்வலத்தில் வரவேண்டாம் எனப் போலீசார் கேட்டுக்கொள்ளவே, சரியென இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஊர்வலத்தில் பெரியாரும், வீரமணியும் அலங்கார ரதத்தில் அமர்ந்து சென்றனர். மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் வரவேற்பாளர் செல்வேந்திரன், தலைவர் வீரமணி; சி.பி. சிற்றாசு, திருவாரூர் தங்கராசு, எஸ்.எஸ். பாட்சா, இறையன் பி.ஏ. பி.டி. ஆகியோரின் உரை. பெரியாரின் பேருரையோ இரு நாட்களுமே! இது ஜாதிப் பாதுகாப்பு மாநாடல்ல, இது ஓட்டு வேட்டை மாநாடல்ல, மானத்துக்கு உயிர் கொடுக்கத் துடிக்கும் மாநாடு - எனவும், திடுக்கிடும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும், எனவும் விளம்பரம் செய்யப்பட்டதால், ஏராளமான பொது மக்கள் குழுமியிருந்தனர். சுதந்திரத் தமிழ்நாடு பெறக் கிளர்ச்சி துவக்குவது என்றும்; கோயில்களில்