பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

588

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


அனைவருமே பூசை செய்வதற்கான உரிமையை நிலை நாட்டுவது என்றும்; கோயில்களைப் புறக்கணிக்குமாறு பொது மக்களை அமைதியாக வேண்டுவது என்றும் தீர்மானங்கள் இயற்றப் பெற்றன. “இந்த அரசு நீடித்து இருந்தால்தான் நமது இந்தக் காரியங்கள் வெற்றி பெற முடியும். அரசுக்கு ஏதாவது இடையூறு வருமென்று கருதி, நம்மைக் கைவிடக்கோரினால், அப்படியே கேட்க வேண்டியதுதான் நமது கடமை! ஏனென்றால், கண்ணைக் குத்திக்கொண்ட பின் சித்திரம் வரைய முடியுமா?” என்றார் தந்தை பெரியார்.

14-3-72 அன்று அர்ச்சகர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அதாவது, அர்ச்சகர் தொழிலுக்குப் பரம்பரை பாத்யதை கிடையாது. ஆனால் அர்ச்சகர் நியமன விஷயத்தில் அந்தக் கோயிலின் ஆகமம் பின்பற்றப்படவேண்டும். “விடுதலை” விமர்சித்தவாறு, இது ஆப்பரேஷன் வெற்றி; நோயாளி இறந்தார் என்பது போன்றதே! 15-ந் தேதி தலையங்கத்தில் “விடுதலை” எழுதிற்று:"டாக்டர் அம்பேத்கர் முன்பு சொன்னது தான் சரி; We are bound by the decision; but we do not bound to respect the decision, "அர்ச்சகர் சட்டத்திருத்தத்துக்காக தி.மு.க. நாடாளுமன்றத்தில் போராடும் என, முதல்வர் கலைஞர் கருத்துரைத்தார். 15-3-72 அன்று பெரியார் ஒரு தீர்க்கதரிசனமான (?) உரையினை நாகப்பட்டினத்தில் நிகழ்த்தினார்: “இன்றைய ஆட்சியைக் கவிழ்க்க எவ்வளவோ சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அப்படியே கவிழ்க்கப்பட்டாலும் நமது கருணாநிதி ஒன்றும் பயந்து விடமாட்டார். தி.மு.க. என்பதில் உள்ள 'மு'வை எடுத்துவிட்டு, நாங்கள் இரண்டு பேரும் ஒன்றுதான் என்று கூறித், தீவிரமாக வந்து விடுவார்” என்றாரே தந்தை பெரியார்

இந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் வேளாங்கண்ணியில், மாவட்ட திராவிடர் கழகச் சார்பில், பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள் 10-3-1972 முதல் நடைபெற்றன. பெரியார் 14, 15 நாட்களில் வகுப்பு நடத்தினார். மற்ற நாட்களில் தோழர்களான கி. வீரமணி, திருவாரூர் தங்கராசு, வே. ஆனைமுத்து, செல்வேந்திரன், கலியராசுலு, வி.பொ. பழனிவேலனார் ஆகியோர் விளக்கவுரைகள் ஆற்றி வந்தனர்.

ஏப்ரல் 1-முதல், இந்தியா முழுவதும் கருக்கலைப்பு சட்ட சம்மதம், என்பது தொடங்கப்படுகிறது. இங்கே முதலில் 22 மருத்துவ மனைகளில் செய்து கொள்ளலாம் என, நல்வாழ்வு அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், 31-3-72 அன்று கூறினார். 4-4-72 மாலை, சென்னை ஷெரீஃப் எம்.ஏ.எம். ராமசாமி, சிகப்பி ராமசாமி, ராஜா சர் முத்தையாச் செட்டியார் ஆகியோர் அளித்த விருந்துக்குப் பெரியார் வீரமணியுடன் சென்றிருந்தார். ஆளுநர் கே.கே. ஷா, முதல்வர் கலைஞர், தலைமை நீதிபதி வீராசாமி, அமைச்சர்கள், பிரமுகர்கள் வந்திருந்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் அபாயக் கட்டத்-