பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

589


திலிருந்த முஸ்லீம்லீக் தலைவர் கண்ணியத்துக்குரிய காய்தேமில்லத் முகமது இஸ்மாயில் சாகிப் அவர்களைப் பெரியார் பார்த்து வந்தார். ஆனால் அன்னார் மரணமடைந்து விடவே. சடலம் புதுக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. இரவே மணியம்மையாருடன் சென்று, மரியாதை செலுத்தினார் பெரியார், மறுநாள் “விடுதலை”யில் துணைத் தலையங்கம் தீட்டப்பட்டதோடு, 5-4-72 அன்று கடற்கரையில், தி.க. சார்பில், அனுதாபக் கூட்டமும் நடைபெற்றது. தெ.மு. சண்முகம் தலைமையில், நெல்லிக்குப்பம் சுப்பிரமணியம், எஸ். துரைசாமி, கி. வீரமணி ஆகியோர் இரங்கலுரை ஆற்றினர். பெரியாரும் அனுதாபம் தெரிவித்தார்; மேலும், பேசும்போது, “மந்திரிகள்மீது லஞ்சம் ஊழல் என்றெல்லாம் இப்போது பேசத் துவங்கியிருக்கிறீர்களே! இதற்கெல்லாம் வழிகாட்டிகளே நீங்கள்தானே! ராஜாஜி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், பக்தவத்சலம் இவர்கள் ஊழல் பேர்வழிகள் அல்லவா? உருப்படியாக எதையும் சொல்லத் தெரியாமல், ஊரிலே பேசிக் கொள்கிறார்கள் என்பதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இது சோதாக்களின் பேச்சு, காமராஜர்தான் ஆதாரத்தோடு ஏதாவது கூறட்டுமே! இவர்களை ஒழித்து விட்டு என்ன செய்யப் போகிறாராம்? பார்ப்பான் காலில் தானே விழப்போகிறாய்?” என்றார் சூடாக.

6-ந் தேதி பிற்பகல் 3-30 மணிக்குப் பெரியால் திடலில், பெரியார் தங்கும் விடுதியில், ஒரு திடீர்த் திருமணம் திரு எம்.எச். ராவ் பி.ஏ.பி.எல், அவர்களின் மகன் ரவீந்திரநாத் எம்.எஸ்சி.யும் கணபதி சேண்டப்பிரியர் மகள் ராஜேஸ்வரி எம்.எஸ்சி.யும் 10 நண்பர்கள் சூழ வந்திருந்து, பெரியார் தலைமையில் தங்கள் திருமணத்தை முடித்துக் கொண்டனர். 25 ரூபாய் நன்கொடை வழங்கினர். இவர்கள் புகைப்படம் 'விடுதலை'யில் இடம் பெற்றது. ராஜாஜி மண்டபத்தில், முதல்வர் கலைஞருக்கும், பெரியாருக்கும், என்.ஜி.ஜி.ஓ. ரகசியக் குறிப்பு முறை ஒழிப்பிற்காகப் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. “மத்திய அரசிலும் ரகசியக் குறிப்பு முறை ஒழிந்தால், அங்கு கொஞ்சநஞ்சமிருக்கிற நம்மவர்களும் தலையெடுக்கமுடியும். இல்லாவிடில் காலம் முழுவதும் பார்ப்பானுக்குப் பயந்துதான் கிடக்க வேண்டும். அரசு ஊழியர்கள் ஆட்சியிடம் விசுவாசமாயிருங்கள்” என்றார் பெரியார். கலைஞர் “பெரியார் சுய ஆட்சிக்குப் பதில் சுதந்திர ஆட்சி ஏன் கூடாது என்கிறார். தமது வாழ்நாளிலேயே தம் கருத்துகளும் எண்ணங்களும் நிறைவேறுவதைக் கண்டு வருகின்ற தலைவர் உலகத்திலேயே நமது பெரியார் ஒருவரே தான் பெரியாரிடமும் அண்ணாவிடமும் நாம் பயின்றது அடக்குமுறை வழியல்ல; அடக்க முறைதான்" என்று பேசிவிட்டு, ஊழியர்கள் எதிர்பாராமலிருந்தபோதே, அங்கு அவர்கட்குப் பஞ்சப்படி உயர்வு அறிவித்தார். அன்றிரவு 8 மணிக்குப் பெரியார் திடலில், ஜார்ஜ்