பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

590

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கோமகன் எம்.எல்.சி. ஆனதற்குப் பாராட்டுக் கூட்டத்தில், அமைச்சர்கள் என்.வி. நடராசன், சத்தியவாணிமுத்து ஆகியோருக்குப் பின்னர், பெரியார் இன்னொரு தீர்க்கதரிசன உரை (?) நிகழ்த்தினார்:- "தி.மு.க. அமைச்சரவை ஆதரவால் இப்படி வெற்றி பெற்றவர், ஆட்சியை ஆதரிக்க வேண்டும்; அநாவசியமாய்த் தொல்லை கொடுக்கக் கூடாது. காமராஜர் அப்படித்தான் என்னுடனிருக்கும்போது அசல் மனிதராயிருந்தார். இப்போது ராஜாஜிக்குக் கையாள் ஆகிவிட்டார். இப்போதே இப்படி என்றால், இன்னும் பதவிக்குப் போனால் அவரிடம் எப்படி, எவ்வளவுக்குப் போவாரோ? காமராஜர் நிலை மிகப் பரிதாபமாயிருக்கிறது. அம்மா கட்சியிலாவது சேரலாமா என்றும் பார்க்கிறார். அது, கிட்டே சேர்க்க மாட்டேன் என்கிறது!" என்று, வவ்வால் மனிதர் நிலைமையைப் பெரியார் விண்டுரைத்தார்.

பகுத்தறிவாளர் மாநில மாநாடு, இழிவு ஒழிப்பு மாநில மாநாடு இரண்டும் சென்னையில் மே மாதம் நடக்கும் என்ற அறிவிப்புகள் வெளியாயின. 8-4-72-ல் காஞ்சிபுரத்தில் தி.மு.க. மாநாடு நடைபெற்றது. பெரியார் திண்டுக்கல்லில் பேசும்போது "பிரிவினை கேட்டால் 7 வருடம் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தேதான் நாங்கள் கேட்டு வருகிறோம். தி.மு. கழகத்தை மிரட்டுவது போல எங்களை மிரட்ட முடியாது. நாங்கள் தேர்தலுக்கு நிற்கும் கட்சியல்ல!" என்று மத்திய அரசுக்குத் தாக்கீது விடுத்தார். 29-4-72 அன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 81-வது பிறந்த நாள். கடற்கரைச் சாலையிலுள்ள அவரது சிலைக்குப், பகுத்தறிவாளர் கழகச் சார்பில், கா.து. நடராசன், என்.எஸ். சம்பந்தம், எஸ். துரைசாமி ஆகியோர் மாலை சூட்டினர். சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் சட்ட மன்ற மேலவையின் துணைத் தலைவராக அன்றைய தினந்தான் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மன்னார்குடியில் மே 6, 7 தேதிகளில் நடந்த தி.மு.க. மாநாட்டில் பெரியாரும் பங்கேற்று, 6-ந் தேதி அண்ணா படத்தினைத் திறந்து வைக்கும் போது, “இன்றும் இரட்டையாட்சி முறைதானே இங்கு நடைபெறுகிறது? அது நீங்கி, நம் சொந்த ஆட்சி நடைபெற வேண்டும். அதற்கு என்ன வழி? முதலில் கோயில் சொத்துக்களை அரசுடைமை ஆக்குங்கள். கடவுளைப் பாதுகாக்க ஒரு இலாகா இருப்பதை ஒழியுங்கள்!" என்றார். 9-ந் தேதி தொட்டியத்தில் “தி.மு.க. ஆட்சி மேலும் 50 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். பொதுமக்களாகிய நீங்கள் இன்னும் பக்குவமடையாத காரணத்தால்தான் ஆட்சியாளர் துணிவாக எதையும் செய்யாமல், பயப்படுகிறார்கள்”, என்று பெரியார் எடுத்துக் காட்டினார்.

மே 27 மாநிலப் பகுத்தறிவாளர் மாநாடு, 28-ல் மாநில இழிவு ஒழிப்பு மாநாடு. முந்தியதற்குத் தலைவர் நாவலர், திறப்பாளர் கலைஞர். பிந்தியதற்குத் தலைவர் பெரியார், திறப்பாளர் சி.பி.