பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

609


நடந்துவிட்டதாக 19-ந் தேதி “சுதேசமித்திரன்” எழுதியது. 17-10-72 அன்று ஜஸ்டிஸ் அழகிரிசாமி, சுப்ரீம் கோர்ட்டின் ஜட்ஜான முதல் தமிழர். இவருக்கு முன்பாகத் தமிழ் தெரிந்த அய்ந்து பேர் இருந்திருக்கிறார்கள். யாரார் தெரியுமா? நீதிபதிகளான வரதாச்சாரி, பதஞ்சலி சாஸ்திரி, டி.எஸ். வெங்கட்ராம அய்யர், சந்திரசேகர அய்யர், ராஜகோபால் அய்யங்கார் ஆகியோர்தான்!

21-ந் தேதி அமைச்சர் கே. ராஜாராம், எம்.ஜி.ஆர். பற்றிக் குறிப்பிடுகையில், “இரண்டு வருடமாகப் பொருளாளராக இருந்தவர், இதுவரை கேட்காத கணக்கை இப்போது கேட்கக் காரணம் என்ன? ‘அய்யய்யோ கலைஞர் எதிலோயோ காலை வைத்து விட்டாரே’ என இவர் பொருளாளராக வைக்கப்பட்டபோதே பெரியார் கூறினார். மதுவிலக்கு நீடிக்க வேண்டாம்; நீக்க வேண்டும் எனப் பேசினார் எம்.ஜி.ஆர்.” என்றதோடு, பிறகோர் சமயத்தில் எம்.ஜி.ஆர். அண்ணாவின் மருத்துவச் செலவுக்குத் தான் பணம் கொடுத்ததாகச் சொன்னபோது, “அப்படியானால் அது இவருடைய வருமானவரிக் கணக்கில் எழுதப்பட்டிருக்குமே, காட்ட முடியுமா?” என்று கேட்டார் ராஜாராம்.

கலைஞர் தலைமை மாறினால் போதாது. தி.மு. கழக ஆட்சியே மாற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னதாக 22-ந் தேதி “அலை ஓசை” ஏடு வெளியிட்டதை, 26-ந் தேதி “விடுதலை” பெட்டிச் செய்தியாகப் பிரசுரித்தது. 22-10-72 அன்று திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் மரணமடைந்தார். பின்னர் 23-1-73 அன்று, கடலூரில் ராஜாங்கம் இல்லம் சென்று, பெரியார் துக்கம் விசாரித்து, அவர் படத்துக்கு மாலை சூட்டி வந்தார்.

22-10-72 அன்று நாகர்கோயிலில் பெரியார் சிலை அமைப்புக் குழு கூடி, முதல் கூட்டத்திலேயே 13, 750 ரூபாய் வசூலாயிற்று. 23-ந் தேதி இராமநாதபுரத்தில், அமைச்சர் மன்னை நாராயணசாமி பேசும்போது கல்லெறிந்து கலகம் விளைவித்ததில், அமைச்சரின் மண்டை உடைந்து, ரத்தம் சிந்தியது. (எம்.ஜி.ஆர். ரசிகர்களால்!)

23-10-72 “விடுதலை”யின் தலையங்கத்தில் பெரியார் தனது அரசியல் நிலை குறித்து ஒரு விளக்கமளித்திருந்தார்: “நான் எப்போதும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க முந்துபவன் அல்லன்; முந்தியதே கிடையாது. என்னை அணுகுகின்றவர்களுக்குத்தான் ஆதரவு கொடுத்து வந்திருக்கிறேன். எனக்கு எந்தக் கட்சி ஆதரவும் தேவையில்லை. ஜஸ்டிஸ் கட்சி என்னை அடைந்ததால் அதற்கு ஆதரவு கொடுத்தேன்: நானே ஜஸ்டிஸ் கட்சியானேன். யாரையும் போய் ஆதரவு தேடாமல்