பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

610

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


இன்று ஜஸ்டிஸ் கட்சியே, அதாவது திராவிடர் கழகமே (முன்னேற்றக் கழகமே) ஆட்சி செய்யும்படியான நிலைமைக்கு அதை ஆக்கியிருக்கிறேன்,

அந்தக் காலத்தில், காங்கிரஸ் ஒழிக்கப்பட்ட 1939-ல், இரண்டு கவர்னர் ஜெனரல்கள் என்னை வேண்டியும், நான் இணங்காமல் வெளியில் நின்றேன். அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்துக், காங்கிரசை அடக்கினேன்.

வெள்ளையர் அரசாங்கம் நாட்டைக் காலி செய்துவிட்டுப் போனவுடன், வேறு கதியில்லாமல் காங்கிரஸ் பார்ப்பனர் கைக்கு வந்தவுடன், அவர்கள் எவ்வளவு என்னை வேண்டியும் நெருங்காமலிருந்து, பார்ப்பனரைப் பதவியிலிருந்து வெளியேற்றினேன். பிறகு பதவிக்கு வந்த பார்ப்பனரல்லாத தமிழர் திரு. காமராஜர், அவரே விரும்பியதற்கிணங்க அவரை ஆதரித்தேன்.

அவர் ஆட்சி மாறி ஜஸ்டிஸ் கட்சியின், திராவிடர் கழகத்தின், ஒரு பிரிவான திராவிட முன்னேற்றக்கழகம் பதவிக்கு வந்தது என்றாலும், அது பார்ப்பனர் ஆதரவு தங்களுக்கு அபாயத்தைக் கொடுக்கும் என்று கருதி, பிரிவுபட்ட ஜஸ்டிஸ் கட்சியின் (தி.மு.க.) தலைவரான அண்ணா அவர்களே தேரில் என் வீட்டிற்கு வந்து, “உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்களே எங்களை நடத்துங்கள்!” என்று சொன்னதால், ஜஸ்டிஸ் கட்சியின் (தி.க.) ஆதரவில் நடந்து வருகிறது. இந்த ஜஸ்டிஸ் கட்சி சேலம் மாநாட்டில் அண்ணா அவர்களின் பிரேரணையின் மீதுதான் 'திராவிடர் கழகம்' என்ற பெயர் கொண்டதாயிற்று. அதற்கு மற்றொரு ஆதாரம் ஜஸ்டிஸ் கட்சி (தி.க.) கொள்கைப்படிப் பார்ப்பனரல்லாதாராலேயே ஆளப்பட்டு வருகிறது தமிழ்நாடு இன்று.”

இதைத் தவிர, 23-ந் தேதியே, இரட்டைக்காலம் பாக்ஸ் ஒன்றும் ‘இன்றைய நிலை’ என்ற தலைப்பின் கீழ்ப் பெரியாரால் வரையப்பட்டது:- “தமிழ் நாட்டின் இன்றைய நிலை எதிரிகளால் மிகவும் பரிகசிக்கத்தக்கதாகவும், பார்த்துப் பரிதாபப்படத்தக்கதாகவும் மாறியிருக்கிறது. நாடெங்கும் கலகம், காலித்தனம், நாசவேலை ஆகிய கேடுகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன. பணக்காரரும் பார்ப்பனரும் சேர்ந்து, தி.மு.க. ஆட்சியை ஒழிப்பதற்கான காரியத்தில், இந்திரா காங்கிரசின் சலுகையும் தேவைப்பட்டதால் அதையும் வேண்டிய அளவு பெற்றுக்கொண்டு, இப்போது திசை திருப்பிவிடும் தந்திரமாக, இதற்கு எம்.ஜி.ஆர். கிளர்ச்சி என்று பெயர் தந்துவிட்டனர். தி.மு.க.வுக்குக் கலைத்துறையில் தொடுப்பு இருந்ததால் எம்.ஜி.ஆர். அங்கிருந்து அரசியலுக்கு இழுக்கப்பட்டார். மெள்ளப் பொருளாளராகவும் ஆகிவிட்டார். இந்த வளர்ச்சியைக் காட்டித், தனக்கு மந்திரி