பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

611


பதவி கேட்டாராம். மதுரை மாநாட்டில் வரம்புமீறிப் பேசி விட்டதாலும் பிணக்கு ஏற்பட்டதாம். இதெல்லாம் தி.மு.க.வை விட்டு வெளியேறுவதற்கான சாக்குதான்! இப்போது எம்.ஜி.ஆரை தூக்கி வைத்துக்கொள்ளும் பத்திரிகைகள், முன்பு இவரை எம்.ஆர். ராதா சுட்டபோது எம்.ஜி.ஆரை ஆதரித்தார்களா? அனுதாபப்பட்டார்களா? இப்போது மட்டும் இவர் மீது என்ன அக்கறை? தமிழர்களே! உங்கள் தலையில் நீங்களே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்ளாதீர்கள்! எச்சரிக்கை!”

இத்தோடு விடவில்லை பெரியார். பார்ப்பனரல்லாத இன நலக் கண்ணோட்டத்தினடிப்படையில், ஒற்றுமைக்காக ஆனவரை முயல்வதே அவரது வாடிக்கை! 24-ந் தேதியும் ‘எம்.ஜி.ஆருக்கு அறிவுரை’ என்ற தலையங்கத் தீட்டினார்:- “எம்.ஜி.ஆர். ஒரு கலைஞர். எனக்கு அந்தத் துறையில் அனுபவம் இல்லை; சுயபுத்திக் கொள்கை உடைய நடிகரின் நாடகம்தான் நான் பார்ப்பேன். இரண்டொரு சினிமா பார்த்திருக்கிறேன். சிவாஜிகணேசன், எம்.ஆர். ராதா ஆகியோரை எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு இவரைத் தெரியாது. இரண்டொரு நிகழ்ச்சிகளில் பார்த்தபோது, வணக்கம் தெரிவித்தார். நானும் பதில் வணக்கம் தெரிவித்தேன் இவருக்கு இன்கம்டாக்ஸ் தொல்லை இருக்கிறது என்கிறார்கள். அதனால் குழப்பம் ஏற்படுவது இயற்கை தான், 'இதனால்தான் யோசிக்கிறேன். நான் கட்டாயம் வேறு கட்சியில் சேரமாட்டேன்' என்று என்னிடம் கூறினார். இவரால் இனி கழகத்திற்கும் தொல்லைதான். இவருக்கும் இனி கலைத்துறையும் வீழ்ச்சிதான். பார்ப்பனர் ஆதரவெல்லாம் எவ்வளவு நாள் தாங்கும்?" என்று.

அடுத்த நாளாகிய 25-10-72 அன்றும் ஓர் தலையங்கம் சிந்திக்க வேண்டும்' என்பதாக! இதில் ஓர் உவமை கூறினார். புருஷன் செத்ததை நினைத்துக்கொண்டு, வேறொரு இழவு வீட்டிற்குச் சென்றாலும், அங்கே அழுவது போல், பார்ப்பனர்களும், தமிழ் மக்களின் எதிரிகளும் சேர்ந்து நடத்துவதே இன்றையக் கிளர்ச்சி, இதற்குப் பத்திரிகைகள் ஆதரவு தருவது எம்.ஜி.ஆருக்காக அல்ல. தி.மு.க.வை ஒழித்து விடுவதற்காகவே - என்று குறிப்பிட்டார் பெரியார்.

தமிழகச் சட்டமன்றப் பேரவைச் செயலாளரும், அண்ணாவின் உடன் பயின்றோருமாகிய சி.டி. நடராசன் அவர்களின் மகன் டாக்டர் பரிமேலழகன் எம்.எஸ். செல்வி வனிதா திருமணம் ஆபட்ஸ்பரி மாளிகையில் 26-ந் தேதி நடைபெற்றது. பெரியார், கலைஞர், அமைச்சர்கள், அதிகாரிகள், தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் வாழ்த்திச் சிறப்பித்தனர். பூந்தமல்லி வழக்கறிஞர் பழனியப்பன்