பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நின்றார். தந்தையோ மகனைப் புரிந்துகொள்ளாமல், பிள்ளைவாள் எங்கே என்று தேடினார். சுப்பிரமணிய பிள்ளைக்கோ எல்லாம் மர்மமாயிருந்தது! நாயக்கர் எப்படி இங்கே வந்தார் என்ற மாயம் புரியவில்லை. திகைத்துக் குழம்பித், தடுமாறி, ‘வாருங்கள்’ என வரவேற்று, அமர்த்தினார். “முதலில் என் மகன் எங்கே யிருக்கிறான்? சொல்லுங்கள்!” எனத் துடித்தார் நாயக்கர்.

மகனே முன்வந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லை. பிரிந்தவர் கூடினர். பேச்சு எழவில்லை. ஒருவாறு இருவரும் மனந்தெளிந்த பின்னர், விசாரணை தொடங்கிற்று. மகன் ஊரூராய்ப் பயணம் மேற்கொண்ட கதையெல்லாம் கேட்டு வருந்திய தந்தை, அவரைத் தேடித், தாமும் போகாத ஊரெல்லாம் போய், அலைந்து திரிந்து வருந்திய கதைகளையும் கூறினார். பின்னர், தந்தையை இரண்டொரு நாள் அங்கேயே தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்ட இராமசாமி, அய்தராபாத் முருகேச முதலியாருக்குத் தந்தி கொடுத்துத், தாம் ஒப்படைத்த நகைகளை அனுப்பச் செய்தார். பெட்டியும் எல்லா நகைகளோடு வந்து சேர்ந்தது. நகைகளையெல்லாம் தன் பிள்ளை விற்றுச் சாப்பிட்டுத் தீர்த்திருப்பானோ என்று அய்யுறவு கொண்டிருந்தார் நாயக்கர். “இவ்வளவு நாளும் சாப்பாட்டுக்கு என்ன செய்தாய் மகனே?” எனத் தந்தை ஆதங்கத்தோடு கேட்க, “நீங்கள் ஈரோட்டில் எவ்வளவோ காலமாய்ச் செய்துவரும் அன்னதானத்தை வெளியூர்களில் வசூலித்து விட்டேன்” எனச் சமத்காரமாய்ப் பதிலுரைத்தார் இராமசாமி. அழுவதா சிரிப்பதா எனப் புரியா விட்டாலும், மகனது சாமர்த்தியத்தைக் கண்டும், அவரது வணிக மனப்பாங்கு குன்றாதிருந்ததைப் பார்த்தும், அளவிட இயலா மகிழ்வுற்றார். ஈரோட்டில் உள்ள மக்கள் தம் இளைய குமாரரைப் பற்றித் தவறாக எண்ணாதிருக்கும் பொருட்டு, எல்லா நகைகளையும் மீண்டும் அணிந்துகொள்ளச் செய்து, இருவரும் புறப்பட்டனர், பிள்ளையவர்களுக்கு உள்ளம் நிரம்பிய நன்றி தெரிவித்து!

ஏலூரிலிருந்து ஈரோடு மீண்டதுமே, தம் பிள்ளைக்குக் குடும்பப் பொறுப்பு வேண்டிய அளவு தொடர்ந்து ஏற்பட ஏதுவாகத், தமது வெங்கட்ட நாயக்கர் மண்டி என்ற மண்டிக் கடை விலாசத்தை, “ஈ.வெ. இராமசாமி நாயக்கர் மண்டி” என்று மாற்றிவிட்டார் வெங்கட்ட நாயக்கர். தாயாருக்கு இராமசாமி மீதுதான் அன்பு அதிகமாம் பெரியபிள்ளை கிருஷ்ணசாமியைவிட! இதை அவர் உரையிலேயே காணலாம்: “எங்கம்மாவுக்கு நானும் எங்கண்ணனுமாக இரண்டு ஆண்பிள்ளைகள். எங்கம்மாவுக்கு என்மேல்தான் அதிக ஆசை. ஆனால் என்னைத் தொடமாட்டார்கள். தொட்டுவிட்டால் குளிப்பார்கள். காரணம், நான் கண்ட இடத்தில் சாப்பிடுகிறேன்