பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

636

பகுத்தறிவு பகலவன் தந்தை


மாறுதல்கள் செய்யப்பட்டத்தை ஆதரித்துப் பாராட்டிப் பெரியார் தமமு கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார். 5.7.73 அன்று இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து மணலி கந்தசாமி ஏ.கே சுப்பையா ஆகிய இரு சட்டமன்ற உறுப்பினர்களும் விலகினர்.

ஜூன் மாதம் 27 - ம் நாள் எடமேலையூரில் பெரியார் தலைமையில், மன்னை நாராயணசாமி முன்னிலையில், மாறுதலாள திருமணவிழா நடைபெற்றது. திருஞானம் - இளவரசி; சிவானந்தம் எம். எஸ்சி - மகாராணி ஆகிய மணமக்கள், தாலி அணியாமல், ஒருவருக்கொருவர் தமது இனிஷியல் பொறித்த டாலர் கோர்க்கப்பட்ட சங்கிலிகளை அணிவித்துக் கொண்டனர். பெரியார், இந்தப் புதுமை முறையை வரவேற்றதோடு ,"உலக நோக்கோடு பரந்த மனப் பான்மையில் வாழ வேண்டிய மனிதனைக் குடும்ப' வட்டத்துக்குள் அடக்குவதே இல்லறம் எனப்படுகிறது. கற்பு என்ற சொல்லையே அகராதியிலிருந்து நீக்கிவிட வேண்டும். ஒழுக்கம் என்பது இருவர்க்கும் பொதுவாக இருப்பது தேவை” என்ற தமது கருத்தையும் வலியுறுத்தினார். மதுரை மாநகராட்சியில் தந்தை பெரியார் திருவுருவப்படத்தினை மேயர் முத்து தலைமையில், அமைச்சர் என். வி. நடராசன் ஜூலை 25 ந் தேதி திறந்தார்.

23, 24 ஜூன் திங்களில் பெங்களூரில் பகுத்தறிவாளர். மாநாடு மிகச் சிறப்புடன் நடைபெற்றது. பேராசிரியர் நஞ்சுண்டசாமி வரவேற்றார். துணை சபாநாயகர் பாதக், டாக்டர் பசுவராஜ், பேராசிரியர் மல்லேஷ், பேராசிரியர் தர்மலிங்கம், விசாலக்குமி சிவலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் பேருரை நிகழ்த்தினார். பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகியவை முக்கிய இடம் பெற்ற கருத்துக்கள். “நான் எதிர்ப்புக்கு அஞ்சாதவன் மரணமே வந்தாலும் தளரமாட்டேன். என் கருத்தைத் தான் நான் கூறுவேன். தனிமனிதனாகத் தமிழ்நாட்டில் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கூறி. மக்களைப் பக்குவப்படுத்தினேன்.!

உலகில் அர்ச்சகன், மாந்திரிகன், சோதிடன் இவர்களை விடப் பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது. மதமும் கடவுளும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்திவிட்டன. பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்களேன். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று சொல்லி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபாதி எண்ணிக்கையுள்ள பெண்களை, நாம் நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டி போடும் கருவி என்றே நினைக்கிறோம். பெண்களும், கணவன்மார்கள் நல்ல நகை நட்டு துணிமணி வாங்கிக் கொடுத்தால் போதும் என்று, தங்களைக் குறுக்கி கொண்டார்கள்.