பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

639


சுயமரியாதை இயக்கத்திலிருந்து செல்லாதவர். இவருக்கு உண்மையிலேயே சுயமரியாதை இருந்தால், இவரது பழைய கட்சியாகிய சுதந்திராக் கட்சி கோருவது போல, இவர் தனது எம்.எல்.ஏ. பதவியை விட்டு விடட்டும்" என்று.

10 -ந் தேதி "தமிழர்களின் பொற்காலம்" என்ற "விடுதலை" தலையங்கம் வரலாற்றுச் சாதனை ஒன்றை ஒளிபொருந்தக் காட்டிற்று. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில், குரூப் 1 தேர்வில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரில் 22 பேர் வெற்றி பெற்றுப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில், சாதி முறையின் படியான சக்கலியர், பள்ளர், வண்ணார். மருத்துவர், சாணார், வலையர், குரும்பர் போன்ற வகுப்பைச் சார்ந்தவர்களும் உள்ளனர் என, இன்னும் விவரமாக, முதல்வரின் எடுத்துக் காட்டுக்களையும் குறிப்பிட்டிருந்தது "விடுதலை"

வழக்கம் போலவே "விடுதலை" 15.8.73 அன்று, இது 26 - வது துக்க நாள் என மகுடமிட்டிருந்தது. பெரியாரோடு நீங்கள் போராட வேண்டியதைத் தவிர்க்கவாவது, தாங்கள் கேட்கின்ற மாநில சுயாட்சியைத் தந்து விடுங்கள். நாங்கள் கேட்பது இந்தியாவைப் பிளவு படுத்த அல்ல. எங்கோ உட்கார்ந்து கொண்டு, எஜமானர்களாக மாநிலங்களை ஆள்கின்ற தன்மை மாறுவதற்குத்தான்" என்றார் முதல்வர் கலைஞர். அமைச்சர் எஸ் இராமசந்திரன் “ஒரே விதமான கருத்தைக் கூறுகிறார்கள் இருவர். ஒருவருக்கு நொபெல் பரிசு தருகிறார்கள்; அவர் பெயர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். அதே கருத்தைக் கூறுகிற இன்னொருவர் பெயர் பெரியார் ஈ.வெஇராமசாமி. அவருக்கு வகுப்புவாதிப் பட்டம் சூட்டுகிறார்களே!" என்றார். 2.4.8.73 செய்தியின் படிச் சேரன் போக்குவரத்துக் கழகத்தின் மூலதனத்தில் 14 சதவீதம் தொழிலாளரின் பங்கு என்றும், இயக்குநர்கள் 10 பேரில் 2 பேர் தொழிலாளர் என்றும் தெரிந்தது.

“நான் ஒரு சமத்துவத் தொண்டன். சமுதாய சமத்துவத்துக்காகப் பாடுபடுகிறவன். அதாவது ஜாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப்பாடுபடும் தொண்டன். எனக்கு ஏற்பட்டிருந்த சலிப்பை நீக்கிய ஆட்சி இது. இப்போது எங்கும் ஜாதி ஒழிப்பிற்கு எதிர்ப்பே கிடையாது. இனி நம்முடைய வேலை கோயில்களைப் புறக்கணித்தல்; நெற்றியில், உடம்பில் மதக்குறிகள் தரிப்பதை நீக்குதல்; பண்டிகை கொண்டாடாமல் இருத்தல் ஆகியவைகள்தான்." என்று பெரியார் “விடுதலை" யில் தலையங்கம் தீட்டினார், 18.8.73 அன்று. அதே நாளில் கிருஷ்ணராயபுரத்தில் பேசும் போது, “சேர சோழ பாண்டிய மன்னர்கள் தமிழ் நாட்டை ஆண்ட போதும், மனுதர்ம ஆட்சிதானே நடத்திவந்தார்கள்!" என்று கேட்டார்.