பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

643



பதில் : தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்கவழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில்தானே இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம். அந்தப் பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக் கொள்ளாமல், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே இன்னும் உதாரணம் காட்டிக் கொண்டுகண்ணை மூடிக் கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்?

கேள்வி: தமிழ் இலக்கியங்களை நீங்கள் குறை கூறுவது ஏன்?.

பதில் : தமிழ் இலக்கியங்களை எழுதிய புலவர்கள் அவற்றைக் கடவுளோடும் மதத்தோடும் இனத்தோடும் அணைத்து எழுதி வைத்திருக்கிறார்களே தவிர, தமிழ் வளர வேண்டும் என்பதற்காக என்ன செய்து வைத்திருக்கிறார்கள்? தமிழ் என்றாலே சைவம், மதம், கடவுள் என்று நினைக்கிறானே தவிர, மக்கள் வாழ்க்கைக்கு, வளர்வதற்கு எவனும் எதுவுமே சொல்லவில்லையே! அதை எப்படி, நம்முடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும்? ஏற்றுக் கொள்ள முடியும்? இன்னமும் அரசியல் சட்டத்திலும் கூட, மதமும் இனமும் சாதியும் வளர்க்கப்படுகிறதே தவிர, அதை மாற்ற எவன் என்ன வழி சொல்லியிருக்கிறான்?.

கேள்வி: தங்களைப் போல் 95 வயது வரை வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

பதில் : எப்போதும் ஆக்டிவ் (சுறுசுறுப்பு) வாக இருக்க வேண்டும்.

கேள்வி: இந்த வயதிலும் தாங்கள் பல மைல்கள் சுற்றுப்பயணம் செய்கிறீர்களே, உடல் நலம் பாதிக்காதா? .

பதில் : வயதிற்கும் இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை . என்னைப் பொறுத்தவரை சும்மா இருக்கப் பிடிக்காது. சுற்றுப் பயணம் செய்தால்தான் நன்றாக இருக்கிறது.

கேள்வி: மாமிசம் சாப்பிடுவதால் தங்கள் ஜீரணசக்தி பாதிக்கப் படவில்லையா?

பதில் : என்னைப் பொறுத்தவரை மற்ற உணவுப் பதார்த்தங்களை விட, மாமிசம் சாப்பிட்டால் ஜீரணமாகி விடுகிறது. அதனால் எந்தத் தொந்தரவும் கிடையாது. மாமிசம் இல்லாவிட்டால்தான் தொந்தரவு.

கேள்வி: கிளர்ச்சி, பேராட்டம் நடத்த வேண்டும் என்கிறீர்களே அது எப்படி இருக்கும்?

பதில் : என் உடல் வேண்டுமானால் தளர்ந்திருக்கலாம். ஆனால் நான் அவற்றில் நேரடியாகவே ஈடுபட நினைக்கிறேன். நான் என்ன சொல்லுகிறேனோ, அதை நானே முன்னின்று செய்தால்தானே நன்றாக இருக்கும்? ஒதுங்கிக் கொள்வது என்பது எனக்குப் பிடிக்காது!