பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

644

பகுத்தறிவு பகலவன் தந்தை



17.9.1973 பெரியாரின் 95 - வது வயதை அழைத்துக் கொண்டு, குணதிசைப் பகலவன் பகுத்தறிவுக் கதிரவனைக் காண வந்து, தனது பொன்னாடை கொண்டு, தங்கநிற மேனியைத் தழுவினான், மகிழ்ந்தான், உவந்தான், பெருமூச்செறிந்தான் பின், அவன் அகற்றப்பட்டான்! ஏன்? பூக்கடைகளுக்கு இன்று போக்கிடமே பெரியார் திடல்தானே! ஆறு மணிக்கு, அன்றலர்ந்த மலர், வெண்தாடி வேந்தனது சந்தனத்து மேனியிலே தவழ்ந்து விளையாடியது. 6 மணி எப்போது அடிக்குமெனக் காத்திருந்த மக்கள் - அலை, மகிழ்ச்சிப் பேரொலியுடன், வரிசை வரிசையாய்ச் சாரை சாரையாய்ப் படையெடுத்தது. அமைச்சர் பெருமக்கள், மரியாதைக்குரிய நீதிபதிகள், மாண்புக்குரிய சட்டமன்றப் பேரவை - மேலவை உறுப்பினர்கள், தலைவர்கள், அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், தி.க கருஞ்சட்டையினர், தி.மு.க கருப்பு சிவப்புக் கரையினர் - வந்து, கண்டு, சென்ற வண்ணமிருந்தனர்.

பெரியார் திடலில், பகுத்தறிவுப் பாதை மாறாத உவமைக் கவிஞர் சுரதா தலைமையில் கவியரங்கம். வீரமணி வரவேற்றார். "விடுதலை" யின் ஆஸ்தான கவி கலிபூங்குன்றன், சுகிசிவம், குடிஅரசு, கவியரசு பொன்னி வளவன், கா. வேழவேந்தன் ஆகிய கவிஞர்களின் பாடல் முழக்கம். இறுதியில் பெரியார் சிற்றுரை:- “தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம், அது தோன்றிய காலம் அப்படி! வள்ளுவன்கூடக் காட்டுமிராண்டிதான்; அவன் தோன்றிய காலம் அப்படி!" என்று ஓதினார் பெரியார். மதியம் 500 பேருக்குரிய விருந்தில் இரு இடத்தை எடுத்துக் கொண்டனர் அமைச்சர்களான ப.உ. சண்முகமும், எஸ். இராமசந்திரனும்,

மாலையில் வீரமணி தலைமையில் பேராசிரியர்களான நன்னன், இராமநாதன், கணேசகோபால கிருஷ்ணன் ஆகியோரின் சொற்போர் அரங்கம் முடிவுற்றதும், நாதசுரச் சக்கரவர்த்தி நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன் குழுவினர் நாயள இசை மழை; இதில் நனைந்து போன பெரியார், பொன்னாடை போர்த்தினார் நாயனவேந்தருக்கு. பிறந்த நாள் பெருவிழா நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் மேயர் ஆறுமுகம் வரவேற்றார். புலவர் கோவிந்தன், சி.பி சிற்றரசு, தெ.து. சுந்தரவடிவேலு, ராஜாசர் முத்தையா செட்டியார், ஏ.பி ஜனார்த்தனம், கி.வீரமணி, அமைச்சர் எஸ். இராமசந்திரன், அமைச்சர் கே. ராஜாராம் வாழ்த்துரை வழங்க, ஆந்திர நாத்திகத்தலைவர் கோரா முழங்க, இறுதியில் தந்தை பெரியார் "அடுத்த போராட்டம் தமிழ்நாடு தமிழருக்கேதான் என்று பிரகடனம் செய்தார்.

பழைய சம்பவம் ஒன்றையும் பெரியார் நினைவு கூர்ந்தார். முன்னர் சாதிப்பித்தம் தலைக்கேறியிருந்த காலத்தில் செட்டிமார் நாட்டுத் திருமண ஊர்வலம் ஒன்றில், மதுரை சிவகொழுந்து நாதசுரம் வாசித்தார். அந்நாளைய சம்பிரதாயப்படி மேல் துண்டை இடுப்பில்-