பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

652

பகுத்தறிவு பகலவன் தந்தை



அடுத்த வருஷத்து விழாவுக்கு நான் இருப்பேனோ, இல்லையோ! இருந்தாலும் விழா இருக்கும்படியான வாய்ப்பு - நடை பெறும் படியான வாய்ப்பு - இருக்குமோ இல்லையோ; உண்மையைச் சொல்லுகிறேன். இதில் ஒன்றும் பெருமைக்காகச் சொல்லவில்லை. ஏன் வாழ்ந்த நாளெல்லாம் ஓர் அளவு மக்களுக்காகத்தான் தொண்டு செய்தேன் என்றாலும், ஏறக்குறைய ஐம்பது வருஷ காலம் பொதுத் தொண்டு நான் செய்தாலும், பெரும்பாலான மக்களுடைய அன்பும் பாராட்டுதலும் பெறும்படியான வாய்ப்புப் பெற்றிருந்தாலும், திருப்தியில்லாத பெரிய மனக்குறையோடுதான் வாழவேண்டியவனாக இருக்கிறேன்.

என்னுடைய தொண்டின் காரணமாக ஏற்பட்ட பல நல்ல காரியங்கள் பாராட்டுதலுக்குரியவை என்றே வைத்துக் கொள்ளுவோம். நம் மக்கள் எல்லோரும் ஏதோ நல்ல அந்தஸ்திலே இருக்கிறார்கள்; பெரும்பாலோருக்கு வெளிப்படையாய் இருந்த இழிவுகள் எல்லாம் நீங்கியும் நீங்கிக் கொண்டும் இருக்கிற ஒரு நல்ல வாய்ப்பிலே தான் இருக்கிறோம். அது யாராலே ஏற்பட்டிருந்தாலும் சரி நல்ல வாய்ப்பிலே இருக்கிறோம்.

ஆனால் ஒன்று சொல்லுகிறேன் - பொறுமையாகக் கேளுங்கள்! நமக்கு இருக்கிற சட்டம் “இந்து வா" என்பதிலே, இந்துக்கள் என்ற சமுதாயத்திலே, பார்ப்பனரைத் தவிர்த்த மற்ற மக்கள் சூத்திரர்கள். அவர்களுடைய தாய்மார்கள், மனைவிமார்கள், சகோதரிகள், மக்கள் ஆகிய பெண்கள் எல்லாம் பார்ப்பானனுக்குத் தாசிகள் என்று சட்டத்திலே இருக்கிறது! தப்புவதற்கே வழி இல்லை!

இது சம்மதம் தானா? இப்படியே இருக்க வேண்டியது தானா? மந்திரியாக ஆனால் போய் விடுகிறதா? இல்லை, கோடீஸ்வரன் ஆனால் போய்விடுகிறதா? இல்லை, பண்டார சந்நிதி - வெங்காயம் ஆனால் போய்விடுகிறதா? என்ன ஆனால் போகிறது? இந்த ஆட்சி ஒழிகிற வரைக்கும் போகாது! அப்புறம் என்ன நான் பிறக்கிறதற்கு முன்னேயே சூத்திரர்கள் நீங்கள்! நான்காவது சாதி நீங்கள்! இப்போது நாளைக்குச் சாகப் போகிறேன். சூத்திரனாய் விட்டு விட்டுத் தானே சாகிறேன். அப்புறம் என்ன என்னுடைய தொண்டு? சிந்திக்கணும் நீங்கள்; கொஞ்சம் கவலையோடு சிந்திக்க வேண்டும். நானும் போய்விட்டேனென்றால், அப்புறம் இதைப் பற்றிப் பேசுவதற்கு ஆள் எங்கே? யார் வருவார்? வந்தால் இவ்வளவுக்குக்கூட விட்டுக் கொண்டிருக்க மாட்டானே அரசாங்கம்!

நானாக இருக்கிறதினாலே கொஞ்சம் சும்மா இருக்கிறான். இன்னொருவன் பேச ஆரம்பித்தால் ஒழித்துப் போடுவான். இப்போதே நம் அரசாங்கத்து மேலே கண் வைத்திருக்கிறான். அது தெரிந்து விட்டது நம் தலைவருக்கு, முதல்வருக்கு அவர் என்கிட்ட