பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

657


கி. வீரமணி; செயலாளர்கள் என். எஸ். சம்பந்தம். ஜே. சீனிவாசன், புலவர் கோ. இமயவரம்பன். மாநாட்டுத் தலைவர் பெரியார்: திறப்பாளர் சிவகங்கை ஆர். சண்முகநாதன், கொடி உயர்த்துவோர் திருச்சி செல்வேந்திரன். மாநாட்டுக்காகப் பொருளுதவியும், அரிசி போன்ற பொருள்களும் அன்பளிப்பாக வழங்கக் கோரிப் பெரியாரே வேண்டுகோள் விடுத்தார் 1.12.73 அன்று.

2.12.73 அன்று செந்துறையில், தமது எழுபதாவது வயதில், சுயமரியாதைக் கொள்கைகளே உயிர் மூச்சாய்க் கொண்டு வாழ்ந்த புலவர் வை.பொன்னம்பலனார் இயற்கை எய்தினார். பெரியார் அன்னாரின் குடும்ப உதவி நிதிக்காக நூறு ரூபாய் வழங்கினார். புலவல் வை. பொன்னம்பலனார் தான் மட்டும் தன்மான வீரராக வாழ்ந்தவரன்று. அவர் ஒரு பெரிய Mint நாணயத் தொழிற்சாலை போல் பல தோழர்களை உருவாக்கினார். அவரை ஒரு துப்பாக்கித் தொழிற்சாலை என்றுகூடச் சொல்லலாம் திருச்சி மாவட்டம், தென்னார்க்காடு மாவட்டங்களில் அவரால் சுய மரியாதை இயக்கத்திற்குப் பல்லாயிரம் வீரர்கள் படைத்தளிக்கப்பட்டனர்! என்று, "விடுதலை" 7.12.73 துணைத்தலையங்கம் புகழ்ந்தது.

2.12. திருச்சியில் சொற்பொழிவாற்றிய பெரியார், “உலகத்தில் பிறந்த மனிதன் என்றைக்காவது ஒரு நாள் சாகத்தான் போகிறான்; அது ஒரு நல்ல காரியத்திற்காக நடக்கட்டுமே! ஆகவே, நாம் ஒரு துணிவான முடிவுக்கு வந்து விட்டோம். தி.மு.க ஆட்சி ஊழலாமே? அப்படியானால் ஊழல் இல்லாமலா இந்த அம்மையார் ஆட்சியைப் பிடித்தார்கள்? அம்மையாரிடத்தில் தெரிகிறதே அசல் பார்ப்பன வெறிக்கோலம்! முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், இந்நாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி இருவருமே பார்ப்பனர். தமிழ் நாடு தவிர மற்ற மாகாண முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பார்ப்பனர்கள்தான்! இதைச் சொல்ல எங்களுக்கு அச்சம் கிடையாது. காரணம், நாங்கள் ஓட்டுப் பிச்சை கேட்போரல்ல? இவர்கள் சொல்லுகிறார்கள் - நான் சாதாரண ஆளாம்! தடைசெய்து பார்! அப்போது தெரியும்! இந்தியா பூராவும் பற்றி எரியுமே எங்கள் பிரச்சனை ஆகையால் தூங்குவது போல் நடிக்காமல் வீண்குற்றம் சாட்டாமல், பிரச்சனைக்குச் சரியான பதிலை உடனே சொல்லுங்கள்!" என்று முரசடித்தார் பெரியார்

4.12.73 தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஒத்திவைப்புப் பிரேரணைகளுக்கு முதல்வர் கலைஞர், வெகு விளக்கமான திட்டவட்டமான பதிலைத் தெரிவித்தார்: “தடைசெய்யக்கூடிய அளவுக்குத் திராவிடர் கழகம் அவ்வளவு பெரிய கட்சியா என்ன? என்று தென் மாநிலங்களில் சுற்றுப்பிரயாணம் செய்த பிரதமர் சொல்லியிருக்கிறார். பெரியாரின் பிரிவினைக் கோரிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டாம்