பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

658

பகுத்தறிவு பகலவன் தந்தை


என்று மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிவிட்டார். அப்படியிருக்க மாநில அரசு மாத்திரம் என் இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்? மேலும், நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளும் சில இருக்கின்றன. நீங்கள் அதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மதுரையில், பிரிவினை கோரும் மாநாடு ஒன்றைப் பெரியார் திறக்க இருந்தார்; அதைத் தடை செய்தோம். பெரியாருடன், அமைச்சர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அங்கு பிரிவினை பற்றிப் பேசப்பட்டால், இது எங்கள் கொள்கை அல்ல என்று நாங்கள் அங்கேயே மறுத்திருக்கிறோம். பெரியார் இப்போது மாத்திரமல்ல; காமராஜர், பக்தவத்சலம் காலத்திலும் பிரிவினை பற்றிப் பேசி வந்துதானிருக்கிறார். நான் இப்போதெல்லாம் தந்தை பெரியார் அவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசி வருகிறேன். இப்போது அவர் நிபந்தனையின் பேரில்தான் பிரிவினை கேட்கிறார். முன்பு பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் (இராஜாஜி) எழுதியதற்கும், நாம் நடவடிக்கை எடுக்கவில்லை . பெரியவர்கள் என்று விட்டுவிடுகின்றோம். இந்த மாநாட்டை ஒட்டி தி.க., ஊர்வலம் எதுவும் நடத்துவதாக இல்லை . ஆனால், நீங்கள் என்னுடன் வந்தால், கோவில்களில், தேவாலயங்களில், எப்படி ஆபாசமாகக் கடவுளர்கள் களங்கப் படுத்தப்பட்டுள்ளனர் என்று காட்ட முடியும்! என விளக்கவுரை புகன்றார் முதல்வர்.

இவ்வாறு பேசுமுன், பெரியார் திடலில் கலைஞர் பெரியாரைத் தனியே சந்தித்தார். மணியம்மையார், வீரமணி, சம்பந்தம், கருணானந்தம் உடனிருந்தார்கள். கர்ப்பக்கிரகக் கிளர்ச்சியைக் கைவிடுமாறு பெரியாரைக் கலைஞர் கேட்டார். நான் நடத்தாமலிருக்க முடியாது. நீங்கள் சட்டப்படி என்னைக் கைது செய்தால், நான் வருத்தப்படமாட்டேன் என்றார் பெரியார். கண்கள் புனல் சிந்தக் கலைஞர், நான் ராஜினாமா செய்து விடுகிறேன். நான் முதலமைச்சராயிருந்து அய்யாவைக் கைது செய்வதா? என்றார். பெரியாரும் கண்ணீர்மல்க உணர்ச்சி வயப்பட்டார். கலைஞர் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்து, அந்தப் பைத்தியக்கார எண்ணம் வேண்டாமென்றார்.

5.12.73 மயிலாப்பூரில் பேசும்போது, “இந்தச் சலசலப்பெல்லாம் எங்களிடம் காட்ட வேண்டாம்! எத்தனையோ வன்முறைகளைச் சந்தித்து, ஈடுகொடுத்து, எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்கள் நாங்கள்! எங்கள் உயிருக்கும் துணிந்துதான் இந்த முயற்சிகளை மேற்கொண் டிருக்கிறோம்" என்று கர்ச்சனை புரிந்தார் பெரியார். பூரிசங்கராச் சாரியார் மீது மகாராஷ்டிர அரசு, வழக்குக் போடப் போவதாக, முதல்வர் வி.பி நாயக், 6-ந் தேதி சொன்னார். திருச்சி மாவட்டம் தவிட்டுப் பாளையத்தில், கிராமப் பஞ்சாயத்து சார்பில், பெரியார் திருமண மண்டபம் கட்டப்பட்டிருந்தது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் எம். வைத்திலிங்கம் ஐ.ஏ.எஸ் 8.12.73 அன்று திறந்து வைத்தார்.