பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

663


செய்ததற்கும், தோழர்கள் சிலர் நம் இயக்கத்திற்காக ரொம்ப உற்சாகமாகப் பணியாற்றி உதவி செய்ததற்கும், நான் அவர்களுக்கெல்லாம் நன்றி செலுத்துகிறேன். அதிகமாகச் சொல்லவில்லை வணக்கம்"

10.12.73 அன்று பெரியார் “விடுதலை” யில் “அப்புறம் என்ன?" என்ற தலையங்கத்தை எழுதி முடித்தார். ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சி 24.1.1974 அன்று துவக்கம், 5 பிரச்சாரப் படைகள் புறப்படும். கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை, கடலூர், கோவை ஆகிய இடங்களிலிருந்தும், ஒவ்வொரு பிரச்சாரப் படையிலும் 5 முதல் 10 பேர் வரை புறப்படுவார்கள்; கருஞ்சட்டையணிந்து, கால்நடையாகவே, வழியெல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டும், 5 பைசாவிலிருந்து கிடைக்கும் அளவு நிதியோ மற்றும் பண்டங்களோ வசூல் செய்து கொண்டும், சென்னையை நோக்கி வருவார்கள்! வழியில், கிளர்ச்சியில் பங்கேற்ற தொண்டர்களையும் திரட்டுவார்கள். - என்று தெரிவித்தார் பெரியார். அத்துடன் தமது சுற்றுப் பயணத் திட்டத்தையும் இறுதியாக உறுதி செய்து விட்டார். டிசம்பர் 12 புகலூர், 16 திருச்சியில் தென்பகுதி ரயில்வேத் தொழிலாளர் யூனியன் நீண்ட நாட்களாய் நடத்தி வரும் பெரியார் பிறந்தநாள் விருந்தில் கலந்து கொள்வது, 17 கும்பகோணம், 21 திருவண்ணாமலை, 22 கந்திலி பஞ்சாயத்து யூனியனில் அண்ணா படத்திறப்பு, 23 வ.ஆ திருப்பத்தூர் - காலை 11 மணிக்குப் பகுத்தறிவாளர் கழகத் துவக்கம்; மாலை பொதுக்கூட்டம், 28 இரும்புலிக்குறிச்சி, 29 உறையூர்.

"கழகத்தில் சதியா?” என்ற தலைப்பில், 'ஆசிரியருக்குக் கடிதம்' பகுதியில், 14.12.73 "விடுதலை" யில், ஒன்று பிரசுரமாகியிருந்தது. மயிலாப்பூரில் நடிகவேள் எம்.ஆர். ராதா, வீரமணியைக் குறைகூறி வெளிப்படையாகப் பேசியதாகவும், ராதாவை முக்கியமாக வைத்து இரண்டொருவர் சேர்ந்து, 'பெரியார் திராவிடர் கழகம்' என ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்திருப்பதாகவும், செ. துரைசாமி எழுதியிருந்தார். 16ந் தேதி வில்லிவாக்கத்தில் பேசிய அமைச்சர் என்.வி. நடராசன், “பெரியாரின் பிரச்சினைதான் என்ன என்று அறியப் பிரதமர் இந்திராகாந்தி, பெரியாரைச் சந்தித்துப் பேசட்டுமே" என்று கூறினார். 20 ந்தேதி சென்னையில், “பெரியார் சொன்னது போல் நாங்களெல்லாம் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள். எங்களிடம் மிரட்டாதீர்கள். தாழ்த்தப்பட்டோர் ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வரலாம்; ஆனால் அர்ச்சகராக வரக்கூடாது என்றால் என்ன நியாயம்?” என்று கேட்டார் முதல்வர் கலைஞர். மலேசிய திராவிடர் கழகத் தலைவர் கே.ஆர். இராமசாமி, தமிழகம் வந்திருந்தவர் 19.12.73 அன்று, தந்தை பெரியாரையும், முதல்வர் கலைஞரையும் சந்தித்துப் பேசினார். பெரியாரின் புதுவேனில் பெட்ரோலுக்குப் பதில் டீசல் எண்ணெயில் ஓடுமாறு