பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

667


ஆரம்பித்தோம் அறிவைப்பற்றி! சுயமரியாதை. இயக்கம் ஆரம்பித்துபோது அதற்கு என்ன கொள்கை தெரியுமா? ஐந்து கொள்கைகள்:- 1. கடவுள் ஒழியணும், 2. மதம் ஒழியணும், 3. காந்தி ஒழியணும், 4. காங்கிரசு ஒழியணும், 5. பார்ப்பான் ஒழியணும். அன்று முதல் இன்றைய வரைக்கும் இந்த 5 கொள்கைகள்தான் நடக்கின்றன.

காந்தியை ஒழித்துப் போட்டார்கள். காங்கிரசும் ஒழிந்தது. அது இனிமேல் உருப்படியாகாது. கடவுளும் தெருவிலே சிரிப்பாயச் சிரிக்கிறார். அதுதான் வீரமணி சொன்னாரே, கடவுளையே செருப்பால் அடித்தார்கள் என்று. என்ன ஆயிப்போயிற்று? கடவுளைச் செருப்பாலே அடித்தான். அதனாலே ஒட்டுப் பண்ண வேண்டாம் என்று காமராஜர் முதற்கொண்டு தப்பட்டை அடித்தார்களே - என்றைக்கும் வாராத அளவுக்கு மேலே வந்து விட்டார்கள்! முன்னேற்றக் கழகத்துக்காரன் 185 பேர். அவர்களை ஆதரிக்கிறவர்கள் 20 பேர். காங்கிரஸ் காந்தி கடவுள் வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20 பேர் கூட வரவில்லையே! ஆனதனாலே, மக்கள் அறிவு பெற்றுக் கொண்டுதான் வருகிறார்கள். பயன்படுத்திக் கொள்ள வேணும்; அவர்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லணும், தெரியாது வெகுபேருக்கு.

தீண்டாமை இல்லை என்று சட்டத்திலே எழுதிப் போட்டான். ஆனால் மதத்திற்கு மாத்திரம் உண்டு என்று அதிலே ஓர் நிபந்தனை. அதே மாதிரிதான், எல்லாருமே கோயிலுக்குப் போகலாம் என்று சட்டமே பண்ணினால், அந்தச் சட்டம் செல்லாது என்று ஆகிவிட்டதே! இவை போலத்தானே சாஸ்திரத்திற்கு விரோதமாய் இருக்கிற எந்தக் காரியமும் இனிமேல் செல்லாது என்று வரும்?

ஆகவே இதை மாற்றியாகணும்; பெரிய முயற்சி பண்ணனும். அரசியல் சட்டம் என்றால், ஓர் அரசாங்கம் நடத்துவதற்கு அது வேண்டியது தான், ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசாங்கம் நடக்கிறதற்கு சூத்திரன் இருக்க வேணுமா? பார்ப்பான் இருக்க வேணுமா? மனுஷன்தானே இருக்க வேணும்!

நேற்று நடந்த மாநாட்டுக்கு வேறே கட்சிக்காரர்களுடைய ஆதரவு ஒன்றும் வரவில்லையே! வரலாம் அல்லவா? டெல்லிக்காரன் சி.ஐ.டியை வேறு போட்டு விட்டான்; அதைப் பார்த்து, வேறு கட்சிகாரர் ஒருவருமே வரவில்லை ! இழிவு ஒழிய வேணும் என்றால், இழிவுக்கு ஆளானவன் எல்லாரும் வரணுமே, வந்து உதவி செய்ய வேணுமே; எங்களோடு சேர்ந்தால் ஓட்டுப் போய்விடுமோ என்று பயப்படுகிறார்கள். மானம் போவது பற்றி யாருக்கும் கவலையில்லையே! நாம் முன்னேற்றம் அடையணும். பள்ளத்திலே கிடக்கிறோம்; முதலில் எழுந்து நிலமட்டத்துக்கு வரணும். அப்புறம் மேலே ஏறணும். யாரும் கவனிக்கவில்லை . ஆனால், நாங்கள் ஒன்று போனால் ஒன்று, ஏதோ செய்து கொண்டே இருக்கிறோம்!