பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

66



மகனின் மனம் விசாலமடைந்ததைத் தந்தை நேரிடையாக அறிந்து, மட்டில்லா மகிழ்ச்சி பூண்டார். கெட்ட நடத்தையுள்ள இரண்டொரு நண்பர்களும், எட்ட விலகிச் சென்று விட்டனர். இராமசாமி எவ்வளவோ தீயவர்களுடன் கலந்து உறவாடியிருப்பினும், மது அருந்துதல் எனுந் தீயொழுக்கம் பற்றியதே கிடையாது. எப்போதோ வெற்றிலைபாக்கு போடுவது உண்டு; புகை பிடித்தலும் வழக்கமாக இருந்ததுண்டு. தமது நாற்பதாவது வயதில் இவற்றையும் அறவே நிறுத்திக் கொண்டார். நல்ல பண்பாளர்கள் அறிவாளிகள் உறவு மிகுந்தது, பா.வே. மாணிக்க நாயகர் இவருக்கு மிகச் சிறந்த நண்பர். கரூர்ப் பெரும் புலவர் மருதையாபிள்ளை புராணப் புரட்டுகளைக் கண்டிப்பதில் வல்லவர். இவரது நட்பு இராமசாமியாரின் கொள்கைக்கு அரணாக அமைந்தது. இக்காலத்தில் வாழ்ந்த இன்னொரு மாபெரும் தர்க்க நிபுணரான கைவல்ய சாமியாரின் கூட்டுறவும் பெரியாரின் பகுத்தறிவு வாதங்களுக்கு உறுதுணை புரிவதாக அமைந்தது.

மகனது பெரும் புகழ் கண்ட தந்தை அகங்குளிர்ந்து இறும்பூது எய்தினார்; மிகுந்த நிம்மதி கொண்டார். நம்பிக்கை அதிகமானதால், தம்மைப்போல் திருவிழா, உற்சவம், கோயில், மத சம்பந்தமான பண்டிகைகளில் ஈடுபாடு ஏற்படட்டும் என்று, தேவஸ்தானக் குழுவில் இடம் பெறச் செய்தார். ஏற்ற பணியினை இனிது நிறைவேற்றுங் கொள்கை கொண்டவராதலால் இராமசாமி, தமக்கு நம்பிக்கையில்லாவிடினும், மிகச் சிக்கனமாகவும் சிறப்பாகவும் அறப்பணிகளைச் செய்து காட்டினார். கோயில் சொத்துகள் கொள்ளை போகாமல் தடுத்தும், கோயில் பழம் பெருச்சாளிகள் சுரண்டலைக் கண்டு பிடித்தும் செவ்வனே நிர்வாகம் நடத்திக் காட்டினார். மகன் கடவுள் பற்றுதல் பெறாவிடினும் கடமையுணர்ச்சி மிக்காராய் விளங்கக்கண்டு, வெங்கட்ட நாயக்கர் பேருவகையடைந்தார்.

உழைப்பால் உயர்ந்த அந்த உத்தமர் வெங்கட்ட நாயக்கர் செழிப்பான பல அறச்செல்வங்களை உருவாக்கினார். அந்தப் பேரறிவாளருடைய திரு, ஊருணி நீர்போல் நிறைந்த பலனைத் தந்தது. தமது மக்களின் நற்செய்கைகளால் தாம் தக்காராய் மேம்பாடடைந்த பெருமையினால், நிரம்பிய நெஞ்சுடன் அவர் இறுதி நாட்களை எய்தினார். நோய்ப் படுக்கையில் இருந்தபோது, தாம் சமாதியில் அடக்கம் செய்யப்பட விழைந்தார். மூத்த பிள்ளையான கிருஷ்ணசாமி, வைணவர்களைப் புதைக்கக் கூடாது, எரிக்கத்தான் வேண்டும் என வாதிட்டார். இரு பிள்ளைகளுக்கும் தனித்தனியே எண்ணற்ற சொத்துகளை ஒதுக்கிவைத்து, மீதமுள்ள செல்வத்தை அறக்கட்டளை நிறுவிடத் தந்தை விரும்பியபோதும், பெரியவர் மறுத்துப் பார்த்தார்; இளையவர்தாம் அப்போதும் தந்தையை ஆதரித்தார். எனவேதான்,