பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஏராளமான செல்வம், இன்றும் அறச் செயல்களுக்காகப் பெரிதும் உதவிவருகின்றது. அண்ணன் கருத்தை ஏற்காமல், தந்தை விருப்பத்தை நிறைவேற்றிட, அதாவது சமாதிக் குழியில் இறக்கி அடக்கம் செய்திட, மரணப் படுக்கையிலிருந்த வெங்கட்ட நாயக்கருக்குச், சாத்திரப்படிச் சந்நியாசம் வழங்க இராமசாமி ஏற்பாடு செய்தார். (சந்நியாசிகளைச் சமாதி வைத்திட, யாரும் எதிர்ப்புக்காட்ட முடியாதே!) அதற்குப் பிறகும் ஊருக்குள் சமாதி எழுப்பிட நகர சபையோர் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலதிகாரிகள் சம்மதம் பெற்று இராமசாமி, தம் தந்தையார் இறப்பதற்கு முன்பே, ஈரோடு பழைய புகைவண்டி நிலையத்திற்கு அருகே, கண்ணுக்கெட்டிய தூரம் தெரியக்கூடிய நாயக்கரின் கட்டடங்கள் தொகுதியின் இறுதியாக உள்ள இடத்தில், சமாதி ஒன்றினை எழுப்பினார். இறந்த பின்னர் வெங்கட்ட நாயக்கரின் உடல் அங்கே புதைக்கப்பட்டது. அவரது உருவச்சிலை ஒன்று. கருங்கல்லில், சிறிய அளவில் வடிக்கப்பட்டு, அங்கே நிறுவப்பட்டுள்ளது.

ஈ.வெ. கிருஷ்ணசாமியாரின் இறுதிக்காலம் வரையில் அந்தச் சமாதிக் கட்டடத்துக்குச் சென்று தந்தையார் சிலையை வணங்கி வருவது அடிக்கடி நிகழும். தந்தை பெரியாரும், சில நேரங்களில் அங்கு சென்று கல்லறைக் கட்டடம் சரியாகப் பராமரிக்கப்பட்டு வருகிறதா என ஆராய்வார்.

இளமையிலேயே மதக் கட்டுப்பாடுகள் சாதிச் சம்பிரதாயங்கள் ஆகிய தளைகளின் கட்டறுத்துச், சுய இச்சைப்படி, அனைவருடனும் சமரச நோக்குடன் பழகியதால், இராமசாமியை எல்லாத் தரப்பினரும் மனங்கனிய நேசித்தனர். அநேக நண்பர்கள் எந்த நேரமும் அவரைச் சூழ்ந்து நிரம்பிக்கிடப்பர். யாருக்கு என்ன தீங்கு நேரினும் வலியச் சென்று, அது நீங்கும் வரையில் நிற்பார். யார் வீட்டு நிகழ்ச்சியிலும், தம் வீட்டு நிகழ்ச்சிபோல் பங்கேற்று, முடித்து வைப்பார். இவ்வுயரிய குணங்களால், இராமசாமியின் புகழ் ஒளிவீசத் தொடங்கிற்று. ஈரோட்டின் கவுரவ நீதிபதியாய் நியமனம் பெற்றுப் பன்னிரண்டாண்டு பணிபுரிந்தார். ஈரோடு வட்ட தேவஸ்தானக் குழுவின் தலைவராகப் பல்லாண்டுகள் தொண்டாற்றி, எல்லாராலும் போற்றப்பட்டார். ஈரோடு தாலுக்கா போர்டு துணைத் தலைவராகவும், ஜில்லா போர்டு மெம்பராகவும் வீற்றிருந்தார். இவற்றிலெல்லாம் இராமசாமி தமது திறமை முத்திரைகளை, நாணயத்தின் சின்னங்களை, நன்கு பொறித்து வந்துள்ளார். அனைத்துக்கும் மேலாக, இன்றைக்கும் அன்னாரின் புகழைப் பறைசாற்றி வருவன, அவர் ஈரோடு நகராட்சித் தலைவராயிருந்து ஆற்றியுள்ள அருஞ்செயல்கள்தாம்!

அப்போது ஈரோட்டுக் கடைவீதி மிகக் குறுகலாக இருந்தது. பொது நலன் கருதி அதனை அகலப்படுத்திட வேண்டும். அதற்கு