பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

68


இடையூறாகப் பெருஞ்செல்வந்தர்களான வணிக வேந்தர்களுக்குச் சொந்தமான மாளிகைக் கட்டடங்களின் முன்புறங்களை இடித்துத் தள்ள வேண்டும். தாமே செல்வக்குடியிற் பிறந்தாலும், பெரும்பான்மை மக்களின் பொது நன்மை கருதிச், சிறுபான்மைப் பணக்காரர்களின் எதிர்ப்பினைத் துச்சமாய் ஒதுக்கிய ஈ.வெ.ரா. தமது நகரசபைத் தலைவர் பதவி தந்த அதிகாரத்தாலும், தமது இயற்கையான துணிவாலும், சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு என்று கூறித் தாமே அருகில் நின்று தேவையான அளவுக்குக் கட்டடங்களின் முகப்புகளை இடித்துத் தள்ளச் செய்தார். அப்போது, மேட்டுக்குடியினர் எதிர்த்த போதிலும், அவர் செய்த அருஞ்சாதனையின் பயனை இன்று பலரும் பாராட்டி, அனுபவித்து வருகின்றனர்.

பாறைப் பகுதியான ஈரோட்டில் குடிநீர்ப் பஞ்சம் தலை விரித்தாடியது. காவிரியாற்றிலிருந்து குடி தண்ணீரை எடுத்து, வடிகட்டிப், பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் குழாய் வழியாக ஊராருக்கு வழங்கிட, முதன் முதலில் திட்டம் தொடங்கி வழிகாட்டியவர் ஈ.வெ.ரா.ஆவார். பெரியாரின் இந்தச் செயலை ஊர் மக்களெல்லாம் போற்றினார்கள். ஆனால் பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மையார் மட்டிலும் குழாய்த் தண்ணீர் கூடாது என்றார்கள். காரணம் என்ன? குழாய்த் தண்ணீரை யார் யாரோ பிடித்து விடுகிறார்கள் - அதில் தீட்டு ஒட்டியிருக்கும் என்பதற்காக.

அதேபோலப், பெரியாரின் வீட்டுமுன் உள்ள குழாயில் நல்லதொரு வேடிக்கை. அதில் தண்ணீர் பிடிக்க ஒரு பார்ப்பன அம்மையார் வரும்போது, ஒரு சுண்டைக்காய் பிரமாணம் புளியும், பஞ்ச பாத்திரத்தில் தண்ணீரும் கொண்டுவந்து குழாயைப் புளியால் விளக்கிக் கழுவிப் பின்பு தண்ணீர் பிடித்துக் கொண்டுபோக ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்த பார்ப்பனரல்லாத மாதர்களும் நெல்லிக்காய் அளவு புளியும் ஒரு தோண்டி தண்ணீரும் கொண்டு வந்து, புளியால் விளக்கிக் குழாயைக் கழுவித் தண்ணீர் எடுத்துக் கொண்டு போனார்கள். இதைக் கண்ணுற்ற முஸ்லீம் சகோதரிகள் எலுமிச்சங்காய் அளவு புளியும் முக்கால் குடம் தண்ணீரும் கொண்டு வந்து புளியால் குழாயை விளக்கிக் கழுவித் தண்ணீர் பிடித்து எடுத்துக் கொண்டுபோகப் பழகினார்கள்.

முஸ்லீம் சகோதரிகளைப் பார்த்து உங்கள் மார்க்கத்தில்தான் வித்தியாசம் கிடையாதே; நீங்கள்கூட ஏன் இப்படிக் கழுவித் தண்ணீர் பிடிக்கிறீர்கள் என்று பெரியார் கேட்கச் செய்தபோது, எங்களுக்கு என்ன தெரியும், இப்படித்தான் தண்ணீர் பிடிப்பது வழக்கமோ என்னமோ, என்று கருதி நாங்கள் இப்படிச் செய்து வருகிறோம் என்றார்கள், இவ்வளவுக்கும் பார்ப்பனர் உண்டாக்கிய பழக்க வழக்கந்தானே காரணம் என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார்.