பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

669


மாட்டோம். அடித்தாலும் பட்டுக் கொள்வோம்; திருப்பி அடிக்க மாட்டோம். ஆனதனாலே, நீங்கள் விஷயங்களைத் தீவிரமாய்க கவனிக்க வேணும். நான் சொல்கிறேன் என்று கேலி பண்ணாதீர்கள். நீ என்ன நாளைக்குச் சாகப் போகிறவன்தானே, துணிந்து வந்திருப்பாய் என்று நானே பண்ண வேணும் என்று இல்லை, நீங்கள் பண்ண வேண்டிய காரியத்தைத்தானே நான் செய்கிறேன். நாம் எல்லோருமே பாடுபட்டதாகத் தெரியணும்.

நாம் எடுத்துக் கொள்ளுகிற முயற்சியினாலே, நாம் செய்கிற தியாகத்தினாலே, மற்றவன் வருவான் நம் கூட 5,000 பேர் 10,000 பேர் ஜெயிலிலே இருக்கிறார்கள் என்றால், ஏனடா இருக்கிறார்கள்? என்று கேட்பான் அல்லவா? பார்ப்பானுடைய தேவடியாள் மகன் என்று இருக்கிறதுக்கு இஷ்டமில்லை என்று ஜெயிலில் இருக்கிறார்கள் என்றால், அவனும், அடடே நம்ம சங்கதி என்ன? என்று கவனிப்பானல்லவா? மலையாளிக்கே இப்போது உணர்ச்சி வந்து விட்டது; நானும் சேர்ந்து கொள்கிறேன் என்று எனக்கு எழுதியிருக்கிறான். பிறகு, தெலுங்கனும் கன்னடியனும் கவனிப்பான். ஒவ்வொருவனுக்கும் உணர்ச்சி வந்து ஆகணுமே!

தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால், ஒரு பத்து வருஷத்துக்குள்ளாக நாமெல்லாம் 100 வயது வாழ்வோம். ஒவ்வொருவரும் தனித்தனியே இறக்கை வைத்துக் கொண்டு பறப்போம். பெண்கள் இந்திரியம் ஒரு டப்பியிலே, ஆண்கள் இந்திரியம் ஒரு டப்பியிலே பேங்க்கிலே வைத்திருந்து, என்றைக்கும் பிள்ளை தேவையோ அன்றைக்குக் கலந்து, குஞ்சு பொரிப்பது போல் பிள்ளை பெறலாம். எல்லாம் நடக்குமா, நடக்காதா? தமிழன் இந்தியாவிலேயே முதல் நம்பராயிருப்பான். இந்தியாவுக்கே வழி காட்டக்கூடிய சக்தி உடையவனாகிவிடுவான்.

ஆகவே நாங்கள் உங்களை ஏய்க்கிறதற்காகப் பொய்யையும், பித்தலாட்டத்தையும், இட்டுக் கட்டிப் பேசவில்லை. நாங்கள் எதையும் சுய நலத்திற்காகச் சொல்லவில்லை . 2,000, 3,000 வருஷங்களுக்கு முன்னே, மனிதன் மடையனாய் இருந்த காலத்தில் கற்பித்த கடவுளையும், புராணங்களையும், கற்பனைக் கதைகளையும், இந்து மதத்தையும், ஜாதி அமைப்புகளையும் இன்றைக்கும் நம்பவேண்டுமென்று எதிர்பார்க்கலாமா? நாங்கள் எல்லா ஆதாரங்களையும் கையில் வைத்துக் கொண்டுதான் இப்படிப் பேசுகிறோம்!

எனவே, அருமைத் தோழர்களே! நேரமாயிற்று. மணி 10க்கு மேல் ஆகிவிட்டது. ஏதோ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். முக்கியமாய்ச் சொன்னதனுடைய கருத்தெல்லாம் நாளைக்கு நடக்கப் போகிற கிளர்ச்சியைப் பற்றி. அதனுடைய தத்துவம் என்ன? அவசியம் என்ன? என்கிறதை விளக்கினோம். நம் கடமை என்ன என்கிறதை நீங்கள் சிந்திக்க வேணும்.