பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

671


ஜான்சனும் அருகிலேயே இருந்து கவனித்தனர். இரவு 1 மணிக்கு டாக்டர் கே. ராமச்சந்திரா சென்னையிலிருந்து வந்து சேர்ந்தார். வேலூருக்கு. மூச்சுத் திணறல் இருந்தது. 4 மணி தொடர்ந்து சிகிச்சை செய்தனர். குறைவதும், மிகுவதுமாயிருந்தது. இந்தச் செய்தி 23 காலை, பத்திரிக்கைகளில் வந்தது.

23.12.73 ஞாயிற்றுக்கிழமை; சிறிது ஓய்வாக இருந்து வரலாம் என்று முதல்வர் கலைஞர் அப்போதுதான் மாமல்லபுரம் போய்ச் சேர்ந்திருப்பார்; அமைச்சர் ராஜாராம் சென்னையிலிருந்து தொலைபேசி வழியே அழைத்தார்கள். கருணானந்தம் அவரோடு பேசினார். இணைப்பு சரியாயில்லாததால் தெளிவாகப் பேச இயலவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது, ராஜாராம் சொன்னதில் பெரியாருக்கு வேலூரில் சீரியஸ் என்று. அடுத்த வினாடியே சென்னை திரும்பி, அமைச்சர்கள் ப.உ. சண்முகம், க. ராஜாராம் மற்றும் ஆர்க்காடு வீராசாமி, கருணானந்தம் ஆகியோருடன் முதல்வர் வேலூர் விரைந்தார். மதியம் 2 மணிக்குப் பெரியார் நினைவிழந்த நிலையிலேயே காணப்பட்டார். பிராணவாயுக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. அருகில் மணியம்மையார். வீரமணி. சம்பந்தம். ஈ.வெ.கி சம்பத் இருந்தனர். இரவு சென்னைக்குத் திரும்பி வரும் போது, கலைஞர் முகம் சோகத்தாலும், நம்பிக்கையின்மையாலும் களைத்துப் போயிருந்தது.

94 ஆவது வயதில் 98 நாட்கள் உயிர் வாழ்ந்த பெரியார் ஈ.வெ. ராமசாமி 24.12.1973 காலை 7.22 மணிக்கு உலக மக்கள் இதயமெல்லாம் நிறைந்தார். நேற்று திருச்சியிலிருந்தார். இன்று சென்னையிலிருக்கிறார். நாளை வேலூரிலிருப்பார் என்று இடங் குறிப்பிட்டு இனிமேல் சொல்ல இயலாதவாறு, அங்கு இங்கு என்னாதபடி, எங்கும் பிரகாசமாய், ஆனந்தம் பூர்த்தியாகி, அருளோடு நிறைந்தார்.

வானொலி நிலையம் அவல இசையை ஒலிபரப்பியது. உடனடியாக வேலூரிலும், தமிழகத்திலும் காட்டுத் தீயெனச் செய்தி பரவாயிற்று. முற்பகல் முழுதும் வேலூரில் மக்கள் அலை அலையாய்த் திரண்டு வீரவணக்கம் செலுத்தினர். மாலையில் சென்னை கொண்டுவர ஏற்பாடு. முதல்வர் கலைஞர் தலைமைச் செயலாளருடன் கலந்தாலோசித்தார். அரசு விடுமுறை அறிவிக்கவும், பெரியாரின் உடலைச் சகல அரசு மரியாதைகளுடனும் அடக்கம் செய்யவும். விழைந்தார். பெரியார் உண்மையிலேயே பெரிய தலைவர்தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை; ஆனால் எந்தக் காலத்திலும், அவர் அரசாங்கத்தில் சிறு பதவியும் வகித்ததில்லையே! அவருக்கு அரசு மரியாதைகள் தர விதிகள் இடந்தராதே?' என அதிகாரிகள் அய்யமுற்றனர். “இப்படித்தான் செய்தாக வேண்டும்!