பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

672

பகுத்தறிவு பகலவன் தந்தை


இதனால் எந்த விளைவுகள் நேர்ந்தாலும் நான் சந்திக்கத் தயார்" என்று தமது முடிவினையே ஆணையாக்கிவிட்டார் முதலமைச்சர், பிறகென்ன

கருப்பு கட்டமிட்ட தனி அரசிதழ் (அடுத்த பக்கம்) Black bordered special gazette வெளியிடப் பெற்றது. பெரியார் மறைவு குறித்து, அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; புதுவை அரசால், புதுச்சேரி மாநிலத்திலும்! காஞ்சிபுரம், கடலூர், புதுவை போன்ற நகரங்களிலும் மற்றும் பல ஊர்களிலும், செய்தி கேள்வியுற்றதும், வணிக நிலையங்கள் மூடப்பட்டன மரியாதை தெரிவிக்க. 24. ந் தேதி முற்பகலில் இராஜாஜி மண்டபம் பெரியாரை வரவேற்கத் தயார்படுத்தப் பெற்றது. பெரியார் திடலிலும், பெரியாரின் சடலம் அடக்கம் செய்யப்படும் இடம் எது என்று, அமைச்சர் பெருமக்கள் தேர்ந்தெடுத்தனர்.

பெரியாரின் அரவணைப்பில் வாழ்ந்து வரும். “விடுதலை” மாதத்தில் பாதி நாள் அவரெழுத்தால் நிறைந்திடும் தனது தலையங்கப் பகுதியை வெண்மையாக்கிக், கருப்புக் கட்டத்துடன், 24.12.73, 25, 12.73 இருநாட்களும் துக்கம் அனுசரித்துத், தனது 26 ந் தேதி வெளியீட்டை நிறுத்தியே வைத்தது, விடுமுறை என்பதற்காக!

தமிழ்நாடே சென்னைக்கு விரைந்தது. ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. பஸ்கள், லாரிகள், கார்கள் நிறைந்தன; பறந்தன சென்னை மாநகரம் நோக்கி. 24 மாலையில் தொடங்கி 25 மாலை, 24 மணி நேரத்தில், சுமார் 205 பேர் நிமிடத்துக்கு என்ற கணக்கில், மக்கள் இராஜாஜி மண்டபத்துக்கு வந்து, தந்தை பெரியாரைக் கண்டு சென்றனர். தமிழ்நாடு அரசின் செய்திப்படத் துறையினர் அனைத்தையும் சுருள்களில் அடைத்தனர். பெரியாரின் ஆஸ்தான புகைப்படக்காரர்களான குருசாமியும், சுந்தரமும் Photogenic ஆன பெரியோரை ஆசை தீரப் படமெடுத்தனர்.

டிரக் வண்டியில் சற்று உயர்த்திச் சாய்வாக அமைக்கப்பட்ட மேடையில், பெரியார் படுத்திருக்க, இருமருங்கிலும் மணியம்மையார், வீரமணி, கலைஞர், நாவலர், என்.வி நடராசன், ஈ.வெ.கி. சம்பத் அமர்ந்திருக்க, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் Punctuality கடைப்பிடித்த பெரியாரின் இறுதி ஊர்வலம், 25.12.73 மாலை 3 மணிக்கு இராஜாஜி மண்டபத்திலிருந்து கிளம்பிச் சரியாக 4.55 மணிக்குப் பெரியார் திடலை அடைந்தது. டிரக் வண்டியின் முன்னால், மலர் தூவிய வண்ணம் தோழர்கள் சென்றனர் தாய்மார்கள் கரங்களில், பாதி இறக்கிக் கட்டப்பட்ட கருங்கொடிகள், தாழ்த்திப் பிடிக்கப்பட்டிருந்தன. ஊர்வலத்தின் முன்னே அமைச்சர் பெருமக்கள், தலைவர்களான காமராஜர், ம.பொ.சி போன்றோர், நடிகவேள் எம்.ஆர்.ராதா, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன்