பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

682

பகுத்தறிவு பகலவன் தந்தை


பேராசிரியரிடமும் சமாதானத் தூதுவராக அனுப்பிப், பெரியாரின் எண்ணம் ஈடேற, எப்படியும் தான் கலைஞரின் சிலை அமைத்திட உறுதி பூண்டுள்ளதாக அறிவித்தார். சிற்பி எஸ். பி. பிள்ளை எனப்படும் பக்கிரிசாமி அவர்களால் வடிக்கப்பட்டு, சில காலமாகச் சந்தேகச் சூழ்நிலையால் தாமதப்பட்டு வந்த, கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் சிலையின் திறப்பு விழா, திராவிடர் கழகத்தினரால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 21.9.1975 ஞாயிறு மாலை 6 மணிக்கு மணியம்மையாரின் தலைமையில் குன்றக்குடி அடிகளார், சென்னை அண்ணாசாலை, புகாரி ஒட்டல் அருகில், இந்தச் சிலையினைத் திறந்து வைத்தார்கள். மாநிலமெங்கணும் இருந்து திராவிடர் கழகச் செயல் வீரர்களும், கருஞ்சட்டைத் தோழர்களும் விழா சிறக்க வருகை தந்தனர்.

ராஜா சர் முத்தையாச் செட்டியார் முன்னிலையில் மணலி கந்தசாமி உரையாற்றினார். முன்னதாக நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் குழுவினர் நாயன இசைமழை பொழிந்தனர். விழாவில் கி. வீரமணி சைதை எஸ்.பி. தட்சிணா மூர்த்தி, சி.பி. இராசமாணிக்கம், கு.கிருஷ்ணசாமி, அ.ஆறுமுகம், ஆம்பூர் ஏ.பெருமாள், டி.டி.வீரப்பா, பொத்தனூர் க.சண்முகம், கோவை இராமச்சந்திரன், எம்.என். நஞ்சையா, குமரிமாவட்டம் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர், இசைமணி சீர்காழி கோவிந்தராசன் கலைஞரைப் பற்றிய பாடல்கள் சில பாடி மகிழ்வித்தார்.

ஈரோட்டில் பெரியாரின் இல்லம் ஒன்றில், முன் பகுதியில் பெரியாரும், பின்பகுதியில் அண்ணாவும் ஒரு காலத்தில் வசித்து வந்தனர். மணியம்மையார் அனுமதியுடன் அந்த இல்லத்தை வாங்கிக் கலைஞர் ஆட்சியில், பெரியார்-அண்ணா நினைவகம் என்று அமைக்கப்பட்டது. இருவரின் சிறு சிலைகளும், புழங்கிய பொருள்களும், நூல்களும் காட்சியாக வைக்கப்பட்டன. 17.9.1975 அன்று மணியம்மையார் தலைமையில் கலைஞர் இதனைத் திறந்து வைத்தார்.

வடநாட்டில் ராம்லீலா என்ற விழா ராமநவமி நேரத்தில் நடைபெறுவதும், அப்போது இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் போன்றார் உருவங்களுக்குத் தீயிட்டு மகிழ்வதும், இந்த மதச்சார்பான விழாவில் குடி.அரசுத் தலைவர், தலைமை அமைச்சர் ஆகியோர் பங்கேற்பதும் கண்டு, பெரியார் பலமுறை கண்டித்துள்ளார்; நாம் ஏன் ராவண லீலா கொண்டாடக் கூடாது என்றும் கேட்டு, நடத்தியும் உள்ளார். அந்த வழியைப் பின்பற்றித், தந்தை பெரியார் கருத்துக் கேற்ப, ஈ.வெ.ரா. மணியம்மையாரும், பெரியார் திடலில் 25.12.74 புதன் மாலை 6.40 மணிக்கு ராவணலீலா நடத்தினார். இராமன், இலக்குமணன், சீதை ஆகியவர்களின் பெரிய பொம்மை உருவில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. மத உணர்ச்சியுள்ளவர்களின் மனத்தை