பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

698

பகுத்தறிவு பகலவன் தந்தை


கொடுக்கிறது என்று தெரிந்தாலும், இன்றும் அதே பண்டம் வைக்கப்பட்டால், மறுக்காமல் சாப்பிட்டுத் துன்பப்படுவது வாடிக்கை, பெரியாருக்கு:

வெளியூர்ப் பயணங்களின்போது தம்முடன் வருகின்ற தோழர்கள், உதவியாளர்கள், டிரைவர் முதலியோரும் சாப்பிட்டார்களா என்று தெரிந்து கொள்வார், பெரும்பாலும் உடன் அமர்த்திக்கொண்டே உண்பார்; அல்லது அவர்கள் சாப்பாடு முடிந்த பிறகே புறப்படுவார், இதுவும் பெரியாரின் தனிப் பண்பாடாகும்.

துவக்க நாட்களில் குதிரை பூட்டிய சாரட்டு வண்டியில் சவரி செய்தவர், பிறகு ஒரு கார் வைத்திருந்தார். இடைக்காலத்தில் 1944; வரை ஈரோட்டில் ஒரு சாதாரண ஒற்றை மாட்டு வண்டிதான் பெரியாரிடம் இருந்தது; யுத்த காலமாக இருந்ததால் கார் வைத்துச் கொள்ளவில்லை. இரயிலில் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்து, வந்தார். வேறு யாராவது அவருக்காக இரண்டாம் வகுப்பு அல்லது முதல் வகுப்பு டிக்கட் வாங்கி வந்துவிட்டால்கூட, வருத்தப்படுவார்; அதைத் திருப்பித் தந்து, மூன்றாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வார்; அதில் மிச்சமாகும் பணத்தை நிதியில் சேர்த்து விடுவார் பெரியார்! புகைவண்டி வருவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே நிலையத்தை அடைந்துவிடுவார். இதை யாராவது தாமதப்படுத்தினால், அவர்கள் பெரியாரின் கடுங்கோபத்துக்கு ஆளாக வேண்டும்!

குறிப்பிட்ட நேரம் தவறாமல் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லும் Punctuality என்னும் பண்பினை அவரளவு சரியாகக் கடைப்பிடித்த தலைவர் உலகிலேயே வேறு எவருமிலர். அதே போல், தாம் ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகளுக்கும் கட்டாயம் எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல் சென்று விடுவார்.

காலை 6 மணிக்குமேல் பெரியார் உறங்குவதில்லை. காலைக் கடன்களை முடிக்கும் போதே சில பத்திரிகைகளைப் படித்து முடித்து விடுவார். இரண்டு மூன்று இட்லியும் காப்பியும் காலை உண்டி. மீண்டும் பத்திரிகை படித்தல், பேசிக்கொண்டிருந்தல், புத்தகம் படித்தல், எழுதுதல், கடிதங்கள் பார்த்துப் பதில் வரைதல், மதிய உணவு கட்டாயம் புலாலுடன். பின்னர் சிறிது பொழுது கண் அயர்தல், பிஸ்கட், மலைவாழைப்பழம், காப்பி -சிற்றுண்டி. பயணநேரங்களில் வேனிலேயே உண்ணல், உறங்கல்! இரவு உணவு பெரும்பாலும் இட்லி, ஓய்வாகச் சாய்ந்து கிடப்பது அவர் வாழ்க்கையில் நடவாத ஒன்று. கார் பேட்டரி ஓட்டத்தில் சார்ஜ் ஆவது போல், பெரியாருடைய உடலும் உழைப்பில்தான் உற்சாகம் பெற்றது.