பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/700

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

699



5 முழ வேட்டி (பின்னாட்களில் கயிலி); உடம்பில் உள்ளே மெல்லிய வெள்ளைத் துணியில் அரைக் கைச்சட்டை! அதிலுள்ள பையில் மணிபர்ஸ்! மேலே முக்கால்கை கருப்புச் சட்டை (1945 முதல்) அதன் பைகளில் - டயரி. கண்ணாடிக் கூடு, முக்கிய காகிதங்கள், தடியான பேனா, பின்னாட்களில் ஒரு பெரிய லென்ஸ்ஆகியவை. மேலே, துடைப்பதற்காகும் துண்டு ஒன்று; எப்போதும் நீங்காத பிரம்புக் கைத்தடி; குளிர் காலத்தில் ஒரு கம்பளிச்சால்வை; செருப்புகள், பழைய ஃபிரேமில் அடங்கிய மூக்குக் கண்ணாடி - குளிப்பதும், துணிகளைத் துவைப்பதும், உடை மாற்றுவதும் அன்றாடக் கடமைகளாகக் கருதியோ, அவரே விரும்பியோ செய்து கொண்டதில்லை, என்றுமே! அம்மையாரின் தொண்டில் இவையும் இணைந்தவை! |

"நான் (Decency) சுத்தம், கண்ணுக்கு வெறுப்பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதிகப் பணம் கொண்ட, - மக்கள் கவனத்தை ஈர்க்கத்தக்க - ஃபாஷன் நகை, துணி வெட்டு போன்ற அலங்காரத்தால் அல்ல; (Simple) சாதாரணக் குறைந்த தன்மையில் முடியும் என்று சொல்வேன்" என்கிறார் பெரியார்.

கருமித்தனம் அல்லது கஞ்சத்தனம் இவற்றிலிருந்து வேறுபட்ட தல்லவா சிக்கனம்? இது சேமிப்புக்கு அடிப்படையாயிற்றோ சிக்கனமாயிருந்து சேமித்த சொத்துகள், இன்று எப்படிப் பல்கிப் பெருகிச் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு ஆதாரமாக நிறைந்து விளங்குகின்றன! பெரியார் என்ற தனி மனிதரின் எளிமைதானே இதற்குக் காரணம்?

புத்தகம் வாங்குவதில் அவர் சிக்கனம் கூடப் பார்ப்பதில்லை , "ஒரு நல்ல புத்தகம் வெளியாகியிருக்கிறது. 50 ரூபாய் விலை, ஆனால் நமக்கு உதவக்கூடியது!" என்று தயக்கத்துடன் தலையைச் சொரியும் வீரமணியை விளித்து, "இந்தாப்பா! இரண்டு புத்தகமாக வாங்கி வா!" என்று பளிச்சென்று கூறி, உள்சட்டைப் பையிலுள்ள பர்சை எடுத்து, மெல்லத் திறந்து, மெல்ல ஒரு நூறு ரூபாய்த்தாளை வெளியில் எடுத்து, மீதியை மெல்ல ஒருமுறை எண்ணிப் பார்த்து, மீண்டும் பர்சை உள் சட்டைப்பையில் மெதுவாகத் திணித்து, வாய்ப்புறத்தில் ஓர் ஊக்கை மாட்டிப், பின்பு, டயரியை வெளியில் எடுத்து, தேதியுடன், 100 ரூபாய் செலவுக்கான விவரத்தை மறக்காமல் அதில் குறித்துக் கொள்வார் பெரியார்.

இரயில் பயணம் செய்யும் காலத்தில் சந்திப்புகளில் வண்டி மாற்றும்போதும், ஏறும் போதும், இறங்கும்போதும் - கையிலுள்ள பெட்டி , ஹோல்டால் போன்ற தமது லக்கேஜ்களை எடுப்பதற்குக் கூலி போர்ட்டர்களை அழைக்க மாட்டார். இருக்கின்ற சாமான்களில் தாமே ஒன்றை முந்திக் கையில் எடுத்துக் கொள்வார். உடன் வருகின்ற