பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

701


பார்த்தவரைப் பரவசமாக்கும் இந்தக் குழந்தைகளில் ஒன்று வளர்ந்து, மங்கைப் பருவம் எய்தி, ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டபோது, பிரிவாற்றாமையால் பெரியாரே கண்ணீர் சிந்தி விட்டார். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

சட்டத்தை மதிப்பவர் பெரியார்; சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதையே எப்போதும் அவர் விரும்புவார். சட்டத்துக்குப் புறம்பாகத் தாம் எப்போதாவது தவறி நடக்க நேர்ந்து விட்டால், தக்க தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயங்கமாட்டார்.

“என் மனைவி முடிவெய்தியபோதும், நான் சிறிதும் மனங்கலங்கவில்லை; ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை! என் தாயார் இறந்த போதும், இயற்கைதானே? 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா இது பேராசை அல்லவா? என்று கருகினேன். என் அண்ணன் மகன் சங்கராமைப் பத்து வயதில் லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்தோம். 20 வயதில் ஊர் திரும்பிய அவன் இறந்து போனதற்காகவும் பதறவில்லை ; சிதறவில்லை !" “என்று பெரியார் எழுதியுள்ள அனுதாப உரைகளைப் படிக்கும் போது, இவருக்கு எவ்வளவு கல்மனது - இறுகிய நெஞ்சம் - இளகாதபாறை உள்ளம் - என்றெல்லாம் எண்ணத் தோன்றும்! ஆனால், அவரது கட்டுரை இத்தோடு நின்றுவிடவில்லை; நீள்கிறது-"பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. காரணம் - மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு தனிப்பட்ட சுக துக்கத்தைப் பொறுத்தது. தன்னலம் மறையும்போது, அவர்களது நினைவும் மறந்து போகும். பன்னீர்செல்வத்தின் மறைவு பொது நலத்தைப் பொறுத்தது; தமிழர்களின் நிலையைப் பொறுத்தது. எனவே, தமிழர்களைக் காணுந்தொறும், நினைக்குந்தோறும் நெஞ்சம் பகீரென்கிறது.

செல்வம் நினைவு பெரியாரை எவ்வளவு தூரம், எதற்காக வாட்டியது என்பது புரியும்போது, பொது நல ஊழியர்கள் பால் அவருக்கிருந்த பற்று, பாசத்தின் உயர்வு, வெளிப்படுகின்றதல்லவா?

பெரியாருக்கு இசையில் ஈடுபாடும், ஞானமும் உண்டு. நகைச்சுவை உணர்ச்சியும், நையாண்டியும் நளினமாக இழையோட, அவர் சில நேரங்களில் பேசுவதுண்டு. தெற்குச் சீமையிலிருந்து தொண்டர் ஒருவர் குடும்பத்துடன் பெரியாரைக் காணவந்தார். அடுக்கடுக்காகப் பத்துப் பன்னிரண்டு பிள்ளைகள் அவருக்கு. அவர் சென்றதும், அருகிலிருந்த தமது தோழர்களிடம் பெரியார், “அய்யாவுக்கு ஊரில் தொழில் எப்படி?” என்று கேட்டார்; பிள்ளை பெறுவது தவிர வேறு வேலை இல்லையோ?' என்பதையே நாசுக்காகக் கேட்டார்!

1970-ல் பம்பாய்ப் பயணத்தின் போது தஞ்சை கா.மா. குப்புசாமியின் கார் ஒன்றும் பெரியாரின் வேனைத் தொடர்ந்து வந்தது.