பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பார்த்ததில் தவறேது? இளநீரும் தேங்காயும் நாரும் மட்டையும் கீற்றுப் பாளையும் கூட இல்லாமல் போகுமே, என்ற அடுத்த கட்டச் சிந்தனைக்கு அங்கே வேலையில்லை!

மதுவிலக்குத் திட்டத்தை எவ்வாறு அமுல் படுத்துவது என்பதை ஆலோசித்துக் கலத்துரையாடி முடிவு செய்யக் காந்தியடிகள் தேர்ந்தெடுத்த ஊர் ஈரோடுதான் ஈவெ. ராமசாமியின் மாளிகையில்தான் காங்கிரஸ் தலைவர்கள் கூடிக் கள்ளுக்கடைகளின் முன் மறியல் செய்வது என்பதைத் தீர்மானித்தனர். ஈ.வெ.ரா மதுவிலக்குக் கொள்கையின்பால் காட்டி வந்த பேராதரவே, காந்தியாரும் பிறதலைவர்களும் ஈரோட்டில் வந்து போராட்ட வழிவகுக்கக் காரணமாயிருந்தது. மேலும் தென்னகத்தில் தோன்றி வளர்ந்து வந்த நீதிக் கட்சியினை முறியடிக்கக் காங்கிரஸ்காரர்களின் மறைமுகமான தூண்டுதலால் திவான்பகதூர் கேசவப் பிள்ளை போன்றவர்களால் துவக்கப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்தின் மாநாட்டை ஈரோட்டில் 1919-ஆம் ஆண்டு ஈ.வெ.ரா. வெற்றிகரமாய் நடத்தியிருந்தார். அதனால் அவரது திறமையில் நம்பிக்கை மிகக் கொண்ட காங்கிரசார் ஈரோட்டிலேயே கள்ளுக்கடை மறியல் போராட்டத்தைத் துவக்கிட நினைத்தனர்.

1921-ஆம் ஆண்டு இந்தியத் துணைக்கண்டமே ஈரோடு நகரம் நோக்கித் தன் விழிகளை அகலத் திறந்து பார்த்து நின்றது. இந்தியக் காங்கிரசின் சரித்திரத்தில் பொன்வரிகளால் பொறிக்கப்படத் தக்க புகழ் மிக்க அந்தப் போரின் தளநாயகர் ஈ.வெ.ரா என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்வதோடு நின்றுவிட முடியாது! காரணம், இராமசாமியாரின் வாழ்க்கைத் துணைநலமாம் நாகம்மையாரும், அன்பு உடன்பிறப்பாம் கண்ணம்மாளும் பெரும் வீராங்கனைகளாய் உயர்ந்தோங்கி நின்று களம் புகுந்து வாகை சூடினர். ஈரோட்டில் 144 தடையுத்தரவு நடைமுறைக்குக் கொணரப்பட்டது. தாம் பிறந்து வளர்ந்து, பெருமகனாய் உலவி, நகர முன்னேற்றத்தில் எந்நேரமும் பாடுபட்டுப் புகழீட்டிய அதே மண்ணில், தமது மண்ணின் மைந்தர்கள் எண்ணிலாத் துயரம் தென்னங்கள்ளினால் எய்தி வருந்துவதைத் தடுக்க மறியல் களம் புகுந்தார் ஈ.வெ.ரா! நூற்றுவர் பின்தொடரக் கைதாகித் தண்டனை பெற்றுச் சிறை புகுந்தார்; நாடெங்கும் அமளி! ஆயிரக்கணக்கில் ஆண் பெண் தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். அன்னையார் நாகம்மையாரும் அருமைத்தங்கையார் கண்ணம்மாளும் போராட்டத்துக்குத் தலைமையேற்று வீரகாவியம் படைத்தனர். தீரரெல்லாம் வேகமாகச் சேர வந்தது கண்டு பிரிட்டிஷ் அரசு விதிர் விதிர்த்தது பல்லாயிரம் பேரை அடைத்து வைக்க இல்லையே இங்கு சிறைச்சாலை எனத் திகைத்துத் தவித்து, 144 தடையுத்தரவைத் தவிர்த்திட, அரசு முன் வந்தது!

இந்தச் சூழ்நிலையில்தான் செந்தமிழ் நாட்டின் புறநானூற்று வீரத்தாய்மார் போல் செம்மாந்து நின்ற நாகம்மையார் - கண்ணம்மாள்