பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

80


இருவரின் மாப்புகழ் இந்தியா எங்கும் எதிரொலித்த செய்தி ஒன்று நிகழ்ந்தது. 1922-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 19-ஆம் நாளிட்ட “இந்து” பத்திரிகையில் இப்பேருண்மை வெளியாகி ஒளிபரப்பியுள்ளது. அதாவது, காந்தியடிகளின் ஒத்துழையாமைக் கிளர்ச்சிகளை நிறுத்திக் கொள்ளுமாறு சமாதானப் பேச்சு வார்த்தைகள் பம்பாயில் நடைபெற்றன. அரசு, ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்ததால், பண்டித மாளவியா, சர். சங்கரன் நாயர் இருவரின் முயற்சியால் ஒரு மாநாடு கூட்டப்பெற்றது அதில் அவர்களிருவரும், கள்ளுக்கடை மறியலை நிறுத்தி விடுங்கள்; வேறு நடவடிக்கை துவக்கலாம் என்று கேட்டபோது, காந்தியடிகள், மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை; அது ஈரோட்டிலுள்ள இரு பெண்மணிகளிடம் உள்ளது; அவர்களைத்தான் கேட்க வேண்டும் என்று பெருமிதத்துடன் பதிலுரைத்தார்!

ஈ.வெ. ராமசாமியாரின் துணைவியும், தங்கையும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதலிடம் பெற்றிருந்தார்கள் என்பதும், முதன்முதலில் காங்கிரஸ் இயக்கத்திற்காகச் சிறை செல்லத் துணிந்தவர்கள் அவர்களே என்பதும் எத்தகைய புகழைத் தமிழர்க்குத் தேடித் தரவல்லன! வாழிய நாகம்மையார் கண்ணம்மாள் புகழ் வண்டமிழ் நாடும் தண்டமிழ் மொழியும் வாழும் வரை! ஆடவரும் வெட்கித் தலைகுனிய, அனைத்து இந்தியாவும் வியந்து மெச்சி நிற்க, மறக்குல மகளிர் திலகங்கள் நிகழ்த்திய அம்மாபெரும் மறியல் போர், மானமுள்ள தமிழ் மக்கள் நெஞ்செல்லாம் நிறைத்திடுக! இவ்வாறு நாடே வாழ்த்திற்று.

1922-ஆம் ஆண்டு ஈரோட்டுக்கு வந்த பண்டித மோதிலால் நேரு, வித்தல்பாய் படேல், டாக்டர் அன்சாரி ஆகிய பெருந்தலைவர்கள் தம் இல்லத்தில் தங்கியிருந்த நினைவாக அப்போது தமது பழைய ரயில்வே நிலைய மாளிகையில் 30 பிள்ளைகள் அடங்கிய இந்தி கற்பிக்கும் பள்ளி ஒன்றினைத் தமது செலவில் துவக்கி, 2 ஆண்டுகள் வரை நடத்தி வந்தார் ஈ.வெ.ரா. அதில் 15 பிள்ளைகளுக்கு உணவு முதலியவை இவர் பொறுப்பு.

காந்தியடிகளின் உயிர் மூச்சாய் விளங்கிய தீண்டாமை ஒழிப்பின் ஒரு கட்டமாகத், தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் எனும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. தீண்டாமை, ஒழிப்பிலும் தாமே ஆழ்ந்து மூழ்கி, எதிர் நீச்சலிட்டு, எதிர்த்துப் போராடி, முதல் வெற்றிகாணும் முழு வாய்ப்பும் ஈ.வெ. ராமசாமிக்கே கிட்டிற்று. யதேச்சையாக இந்த வாய்ப்பு இவரை நாடி வந்தது; இவர் தேடிப் போகவில்லை.

1924-ஆம் ஆண்டு ஈ.வெ.ரா. குளித்தலையில் ஒரு காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு, அங்கிருந்தவாறே, மதுரை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போய்விட்டார்.