பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


அங்கே வயிற்று நோய் அதிகம் துன்புறுத்தவே, இடையே தடைபட்டு, ஈரோட்டுக்கு மீண்டார். அங்கு வந்து படுக்கையில் ஓய்வாக இருந்த போதே, அவருக்கு ஓர் இரகசியக் கடிதம் வந்தது. அதைக் கண்டதும், நாகம்மையாரிடம் தமக்கு உடல்நலிவு குணமடைந்து விட்டதாகப் பொய்யுரைத்து, அதாவது “புரை தீர்ந்த நன்மை பயக்குமானால் பொய்யும் மெய்யோடு சேர்த்துக் கொள்ளப்படும்” என்ற குறள் மொழிப்படித் தமது பெட்டி படுக்கை துணி மணி சகிதம் புறப்பட்டுப் போய்விட்டார்.

என்ன அந்த மர்மக்கடிதம்? எங்கே போனார்? கேரள ராஜ்யத்திலுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்று ஒரு பேரூர். அங்கே கோவிலுக்கு அருகிலுள்ள தெரு ஒன்றில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என நீண்ட நாளாகத் தடையிருந்து வந்தது. அதாவது ஆரியசமாஜத் தீயர்களையும், மதம் மாறிய கிறிஸ்துவப் புலையர்களையும், தெருவில் நடக்க விடவில்லை; இஸ்லாமானவரை அனுமதித்தார்கள்! மக்களின் மான உணர்ச்சிக்கு விடப்பட்ட இந்த அறைகூவலை எதிர்த்துப் போராடக் கேரளக் காங்கிரஸ் தலைவர்கள் முடிவெடுத்தனர். வைக்கம் நகரில் தடைமீறும் போராட்டம் துவங்கியது. நாளுக்கு ஒருவராய்த் தலைவர்கள் அரசினரால் கைது செய்யப்பட்டு வந்தனர். 19-ம் நாள் ஆனதும் மேலும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவரத் தலைவர்கள் இல்லை. சிறையிலிருந்த ஜார்ஜ் ஜோசஃப், கேசவமேனன் ஆகிய தலைவர்கள் ஆழ்ந்து யோசித்து, இனி இந்தக் கிளர்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வெற்றி தேடித்தரத்தக்க தலைவர் ஈரோட்டு இராமசாமி ஒருவர்தாம் எனத் தேர்ந்து, அன்னாருக்குச் சிறையிலிருந்தவாறே, அபாயம் என்ற அபயக் கடிதம் ஒன்றினை அனுப்பி அழைத்தனர். கேரளத்தாரின் மானம் தங்கள் கையில்தான் உள்ளது என அகமுருக எழுதியிருந்தனர். இது போதாதா ஈ.வெ. ராமசாமிக்கு?

மணவிழா மடல் கிடைக்கப் பெற்றாற்போல் மகிழ்வு பூண்டவராய் மறுநாளே படகில் ஏறி, வைக்கத்தில் வந்து குதித்தார். கிளர்ச்சியில் ஈ.வெ. ராமசாமி ஈடுபடப் போகிறார் என்ற செய்தி திருவாங்கூர் மன்னரின் செவிகளை எட்டியதும், தமது உயர் அதிகாரிகளை அனுப்பி மன்னர் சில ஆணைகளை நிறைவேற்றச் சொன்னார். என்ன அவை? மன்னர் டெல்லிக்குச் செல்லும் போதெல்லாம் தமது பரிவாரங்களுடன் ஈரோட்டில் இறங்குவார். அரச வாழ்வு நடத்திவந்த இராமசாமியாரின் ரயில்வே ஸ்டேஷன் பங்களாவில் அரசரும், அடுத்துள்ள நாயக்கர் சத்திரத்தில் ஆள்அம்புகளும் தங்குவர்; அறுசுவை விருந்து அருந்துவர்; அன்பான உபச்சாரத்தை ஏற்பர். இது அநேகமுறை நடந்து வந்த வாடிக்கை. இதற்கெல்லாம் பதிலாகத் தாம் எப்போது இராமசாமியார்க்கு