பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

82


உபசரிப்புகள் செய்ய முடியுமோ என ஏங்கியிருந்தார் மன்னர். வந்திருப்பது கிளர்ச்சிக்குத் தலைமை ஏற்கத்தான் என்றாலும் தமது அரச மரியாதைகளையும் ஏற்கத்தான் வேண்டும் எனத் திருவாங்கூர் மன்னர் வேண்டியிருந்தார். வேண்டாமென மறுத்து மன்னிப்பு வேண்டினார் ஈ.வெ.ரா. அரசப் பிரதிநிதிகள் எவ்வளவோ எடுத்து மொழிந்தும் ஈ.வெ.ரா. இணங்கவில்லை. வணங்கி வாழ்த்தித் திருப்பி அனுப்பிவிட்டார். கேரளத்து வைக்கம் வாழ் மக்களுக்கு இராமசாமியாரின் மகத்துவம் புரியவந்தது.

ஈ.வெ.ரா. தலைமையில் மீண்டும் புத்துயிர் பெற்றது தீண்டாமை ஒழிப்புப்போர். பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர், வைக்கம் நகரத்திலே. போராட்டத்தில் குதிக்கவும் அனுமதி கேட்டனர். ஈ.வெ. ராமசாமி தம் வழக்கம்போல் - மறக்குலப் பண்டைத் தமிழ் மன்னர் மரபுபோல் - தாமே தலைமை பூண்டு, முதல் தளபதியாய்க் களத்தில் இறங்கிக் கைதானார். அடுத்து, கோவை அய்யாமுத்து, மாயூரம் இராமநாதன், அன்னை நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் தலைமை தொடர்ந்தது. ஒரு மாதக் தண்டனை பெற்று விடுதலையான ஈ.வெ. ராமசாமிக்குத் திருவாங்கூரிலிருந்து நாடு கடத்தல் உத்தரவு வழங்கப்பட்டது. அதையும் மீறி, ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை ஏற்றார். திருவனந்தபுரம், அருவிக்குத்தி என்ற, தீவுச் சிறையில் அடைக்கப்பட்டார். அருவிக்குத்தி தீவுக்குப் படகில் செல்லும்போது புயலால் தாக்குண்டு படகு வேறு பக்கம் ஒதுங்கியது. சட்டத்துக்குக் கட்டுப்படும் ஈ.வெ.ரா. தாமே முனைந்து, படகில் வந்த காவலர்க்கும் பாதுகாப்புத்தந்து, உதவி பெற்றுத், தாமே சிறைக்குள்ளும் சேர்ந்தார். அன்னை நாகம்மையார் முன்னிலும் மேலோங்கிய உணர்வுடன், மும்முரமாய்த் திருவாங்கூர் முற்றிலும் சுற்றிப் பயணம் செய்து, நாடுதழுவிய கிளர்ச்சியை உருவாக்கினார். காந்தியடிகளே நேரில் வந்து பெரியாரைச் சந்தித்துத் திருவாங்கூர் ராணியின் நல்ல முடிவு பற்றிக் கூறி அவரை இசையச் செய்தார். அதன் பிறகுதான் அரசு இறுதியாகப் பணிந்தது! தாழ்த்தப்பட்ட மக்கள், தெருவில் நடக்கும் உரிமை பெற்றனர். 1925 நவம்பர் 29-ல் வெற்றிவிழாக் கூட்டத்தில் ஈ.வெ.ரா. கலந்து கொண்டார். “வைக்கம் வீரர்” என்ற சிறப்புப் பட்டம் சூட்டி இராமசாமியை இந்தியமக்கள் கொண்டாடினர். வைக்கம் வெற்றியை அடுத்துத்தான் சுசீந்திரத்தில் அரிசனங்கள் ஆலயப் பிரவேசக்கிளர்ச்சி என ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் பின்விளைவாய் ஆலயங்கள் அனைவர்க்கும் திறந்து விடப்பட்ட சூழ்நிலை பிறந்தது. 1926-ல் சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தை ஆதரித்துக் “குடி அரசு” 31-1-26-ல் ஈ.வெ.ரா. தலையங்கம் எழுதினார்.

ஆறுமாதச் சிறைத் தண்டனையைத் திருவனந்தபுரத்தில் அனுபவித்து வந்தபோது, நான்கு மாதங்கள் ஆகிய பின்னர்,