பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


திருவாங்கூர் மன்னர் மறைந்து விட்டதையொட்டி ஈ.வெ.ரா. விடுதலை செய்யப்பட்டார். நேரே ஈரோடு சென்று நோய் வாய்ப்பட்டிருந்த தமது அன்னையார் சின்னத்தாயம்மையாரைக் காண விழைந்தார். 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 11-ஆம் நாள் ஈரோட்டில் அடிவைத்ததும், சென்னை மாகாண அரசால் கைது செய்யப்பட்டுச் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 124-A, 153-A பிரிவுகளின்மீது அவர்மேல் அரசு வழக்குத் தொடர்ந்தது. ஏழெட்டு மாதங்களுக்கு முன்னர் அவர் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் ராஜத்துவேஷ, வகுப்புத் துவேஷ வெறியிருந்ததாம். அதில் என்ன புதுமை? அவர் தொழிலே அதுதானே! பின்னர் என்ன காரணமோ, அந்த வழக்கில் அடிப்படையான ஆதாரம் இல்லையென அரசே திரும்பப் பெற்றுக்கொண்டது! ஈ.வெ. ராமசாமியை விடுவித்தது! அப்போதைய அரசியல் நோக்கர்கள் இதற்கு வேறொரு வியாக்கியானமும் தந்தனர். திருவாங்கூர் சமஸ்தானத்தில் மீண்டும் நுழைந்து ஈ.வெ.ரா. போராடாமல் தடுக்கவே, திவான் மாதவையா கேட்டுக் கொள்ளச், சென்னை அரசின் சட்டமந்திரி சர் சி.பி. இராமசாமி அய்யர் இந்த வழக்கைப் போட்டார். பின்னர், வைக்கத்தில் தெருவைப் பொதுவாக்கும் நெருக்கடி நேர்ந்ததால்,

ஈ.வே.ரா.வை விடுதலை செய்யுமாறு நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதே அது! யாருக்குத் தெரியும் சாணக்கியர்கள் சூழ்ச்சி?

காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கங்கள் நல்ல வண்ணம் வெற்றி சூடி வந்தன. தென்னாட்டில் நூற்றுக்கு நூறு அந்தப் பணியின் பெரும் வெற்றி, ஈ.வெ. ராமசாமியால் நிகழ்ந்தது. இந்நிலையில் காங்கிரசில் ஒரு கருத்து மாறுபாடு முளைவிட்டது. சித்தரஞ்சனதாசர் தலைமையில் சிலர் கூடி, இனி அரசுடன் ஒத்துழைத்துச், சட்டமன்றங்களைக் கைப்பற்றி, ஆட்சி அமைக்க வேண்டும் என வாதிட்டனர். அதற்கென சுயராஜ்யக் கட்சி என்றொரு அரசியல் அமைப்பினையும் தொடங்கினர். இதன் கிளை தென்னகத்தில் தோற்றுவிக்கப்பட்டு, அதனைப் பார்ப்பனர்களே முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டனர். காந்தியடிகளை அப்போதும் இராஜாஜியும் இராமசாமியாரும் பின்பற்றி நின்றனர். சென்னை மாகாண சுயராஜ்யக் கட்சியின் பிறப்பு நோக்கம் குறித்து ஈ.வெ.ரா. ஓர் அய்யுறவு கொண்டார். அதுதான் உண்மையுங்கூட. அதாவது -

ஆங்கிலேயர்களால் சென்னை ராஜதானி என்று அழைக்கப்பட்ட மாகாணம், நான்கு மொழி மாநிலங்களை உள்ளடக்கியிருந்தது. நிஜாம்ராஜ்யம் நீங்கலாக ஆந்திரம், மைசூர் ராஜ்யம் நீங்கலாகக் கர்நாடகம், திருவாங்கூர், கொச்சி சமஸ்தானங்கள் நீங்கலாக கேரளம், புதுக்கோட்டை சமஸ்தானம் நீங்கலாகத் தமிழகம். ஜமீன்தார் மிட்டாதார் மிராசுதார்